கடலூர்
கார்களில் கடத்தி வரப்பட்ட 3,500 சாராய பாக்கெட் பறிமுதல்
|புதுச்சேரியில் இருந்து கடலூருக்கு கார்களில் கடத்தி வரப்பட்ட 3,500 சாராய பாக்கெட் பறிமுதல் செய்யப்பட்டது. போலீசாரை கண்டதும் வாகனங்களை நடுரோட்டில் நிறுத்திவிட்டு 4 பேர் ஓடிவிட்டனர்.
கடலூர்:
புதுச்சேரியில் இருந்து கடலூர் வழியாக பெரிய காரைக்காடு பகுதிக்கு கார்களில் சாராயம் கடத்தி வரப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் கடலூர் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் எழிலரசி தலைமையிலான போலீசார் இன்று அதிகாலை 5 மணி அளவில் முதுநகர் அடுத்த பெரிய காரைக்காடு பகுதியில் வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த 2 கார்களை போலீசார் வழிமறித்தனர். போலீசாரை கண்டதும் 2 கார்களையும் நடுரோட்டிலேயே நிறுத்தி விட்டு 4 பேர் தப்பி ஓடி விட்டனர்.
இதையடுத்து போலீசார், 2 கார்களிலும் சோதனை நடத்தினர். அதில் 10 சாக்கு மூட்டைகள் இருந்தன. பின்னர் அதனை பிரித்து பார்த்ததில் சாக்கு மூட்டைகள் முழுவதும் சாராய பாக்கெட்டுகள் இருந்தன. தொடர்ந்து போலீசார் 2 கார்களிலும் இருந்த 200 எம்.எல். அளவு கொண்ட 3,500 சாராய பாக்கெட்டுகளையும், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 2 கார்களையும் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட சாராய பாக்கெட்டுகளின் மொத்த மதிப்பு ரூ.2 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது. தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய 4 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.