திருவாரூர்
350 சிறு, குறுந்தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டன
|மின் கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி 350 சிறு, குறுந்தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டன.
430 சதவீதம் உயர்த்திய மின்சார நிலைக்கட்டணத்தை திரும்ப பெற வேண்டும். உச்ச நேர கட்டணம் என்பதை திரும்ப பெற வேண்டும். வருடாந்திர மின் கட்டண உயர்வை உடனடியாக ரத்து செய்திட வேண்டும். 2 ஆண்டிற்கு மின் கட்டண உயர்வை தவிர்க்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முதல்-அமைச்சரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் சிறு, குறுந்தொழில் நிறுவனங்கள், தங்களது உற்பத்தியை நிறுத்தி போராட்டம் நடத்துவதாக அறிவித்திருந்தனர். அதன்படி திருவாரூர் மாவட்டத்தில் 350 சிறு, குறுந்தொழில் நிறுவனங்கள் நேற்று தங்களது நிறுவனங்களில் உற்பத்தி நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனை தொடர்ந்து திருவாரூர் மாவட்ட சிறு மற்றும் குறுந்தொழில்கள் சங்கத்தின் மாவட்ட தலைவர் அருண்காந்தி, மாவட்ட பொதுச்செயலாளர் பாபு, மாவட்ட பொருளாளர் சொக்கலிங்கம், கவுரவ தலைவர் ரவிச்சந்திரன் மற்றும் நிர்வாகிகள் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் ஒரு கோரிக்கை மனு அளித்தனர். அதில், அதிகப்படியான மின் கட்டண உயர்வால் சிறு தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளது. இதனை மின்துறை அமைச்சர் மற்றும் உயர் அதிகாரிகளுக்கு தெரிவித்து எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படாததால், முதல்-அமைச்சர் கவனத்திற்கு எங்களது வேண்டுகோளை கொண்டு செல்லும் வகையில் நேற்று தமிழ்நாடு முழுவதும் உள்ள சிறு தொழில் நிறுவனங்கள் உற்பத்தி நிறுத்தம் செய்துள்ளோம். எங்களது நியாயமான கோரிக்கைகளை அரசுக்கு தெரிவித்து சிறு தொழில் நிறுவனங்களை காப்பாற்ற வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.