< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்

சென்னைக்கு தென்கிழக்கே 320 கி.மீ. தொலைவில் 'மாண்டஸ்' புயல் மையம்

தினத்தந்தி
|
9 Dec 2022 5:36 AM IST

வங்கக்கடலில் உருவான 'மாண்டஸ்' புயல் தீவிரம் அடைந்து, வட தமிழக கடலோர பகுதிகளை நோக்கி நகருகிறது.

சென்னை,

வங்கக்கடலில் உருவான 'மாண்டஸ்' புயல் தீவிரம் அடைந்து, வட தமிழக கடலோர பகுதிகளை நோக்கி நகருகிறது. இன்று (வெள்ளிக்கிழமை) இரவு முதல் கரையை கடக்க வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

புயல் தீவிரமானது

வங்கக்கடலில் கடந்த 5-ந்தேதி உருவான இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, நேற்று முன்தினம் காலையில் தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நிலைக்கொண்டிருந்தது. பின்னர், மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, நேற்று அதிகாலையில் புயலாக வலுப்பெற்றது. இந்த புயலுக்கு 'மாண்டஸ்' என்று பெயரிடப்பட்டுள்ளது.

தொடர்ந்து இந்த மாண்டஸ் புயல் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, நேற்று இரவுக்கு பிறகு தீவிர புயலாக வலுப்பெற்றது. இன்று (வெள்ளிக்கிழமை) காலை வரை தீவிர புயலாக இருந்து, பின்னர் மீண்டும் புயலாக வலுவிழந்து, வட தமிழகம், புதுச்சேரி மற்றும் தெற்கு ஆந்திர கடலோர பகுதியை நெருங்கும் என்றும், அதனை தொடர்ந்து நள்ளிரவு முதல் நாளை (சனிக்கிழமை) அதிகாலை வரையிலான இடைப்பட்ட காலத்தில் புதுச்சேரிக்கும், ஸ்ரீஹரிகோட்டாவுக்கும் இடையே, மாமல்லபுரம் அருகில் கரையை கடக்க வாய்ப்பு இருக்கிறது என்றும் வானிலை ஆய்வு மையம் கணித்து இருக்கிறது.

புயலின் 'கண்' பகுதி

புயலின் மையப்பகுதி என்று அழைக்கப்படும் கண் பகுதி சென்னைக்கு அருகே மாமல்லபுரத்தை சுற்றிய பகுதிகளில் கடக்கக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது. கரையை கடக்கும் போது குறைந்தபட்சம் மணிக்கு 65 கி.மீ. முதல் 75 கி.மீ. வரையிலும், அதிகபட்சமாக 85 கி.மீ. வேகத்திலும் சூறாவளி காற்று வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. மாமல்லபுரத்தில் புயல் கரையை கடந்தாலும், கரையை கடக்கும் இடத்துக்கு வடக்கு மற்றும் தெற்கு பகுதிகளிலும் புயலின் தாக்கம் இருக்கும்.

இந்த புயல் காரணமாக, தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் இன்று முதல் 3 நாட்களுக்கு பெரும்பாலான இடங்களில் மழைக்கான வாய்ப்பு இருக்கிறது. சில இடங்களில் கன முதல் மிக கன மழையும், ஓரிரு இடங்களில் அதி கனமழையும் பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

'ரெட் அலர்ட்'

அதன்படி, இன்று காஞ்சீபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் மற்றும் புதுச்சேரியில் சில இடங்களில் கன முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதி கன மழையும் பெய்யக்கூடும் என்றும், திருவள்ளூர், சென்னை, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கன மழையும், தர்மபுரி, சேலம், நாமக்கல், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, கரூர், திண்டுக்கல், மதுரை, சிவகங்கை மாவட்டங்கள், காரைக்காலில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு இருக்கிறது என்றும் அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

இந்த மாவட்டங்களில் அதி கனமழை மற்றும் சூறாவளி காற்று வீசக்கூடிய காஞ்சீபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் ஆகிய 3 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரிக்கு நிர்வாக ரீதியாக 'ரெட் அலர்ட்'டும், கன முதல் மிக கனமழை பெய்யக்கூடிய மாவட்டங்களுக்கு 'ஆரஞ்சு அலர்ட்'டும் விடுக்கப்பட்டுள்ளது.

மிக கனமழை

நாளை திருவள்ளூர், சென்னை, காஞ்சீபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், விழுப்புரம், புதுச்சேரி, கள்ளக்குறிச்சி, சேலம், ஈரோடு, நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழையும் பெய்யக்கூடும்.

நாளை மறுதினம் (ஞாயிற்றுக்கிழமை) தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்ய வாய்ப்பு இருக்கிறது.

மீனவர்களுக்கு எச்சரிக்கை

தமிழகம், புதுச்சேரி கடலோரப் பகுதிகளில் இன்று காலை முதல் மாலை வரை 50 கி.மீ. முதல் 60 கி.மீ. வரையிலான வேகத்திலும், இடையிடையே 70 கி.மீ. வேகத்திலும் சூறாவளி காற்று வீசக்கூடும். அதேபோல், இன்று மாலை முதல் நாளை காலை வரை மணிக்கு 65 கி.மீ. முதல் 75 கி.மீ. வரையிலான வேகத்திலும், இடையிடையே 85 கி.மீ. வேகத்திலும் பலத்த காற்று வீசக்கூடும். அதன் பின்னர் காற்றின் வேகம் குறைந்து நாளை இரவு வரை 50 கி.மீ. வேகத்தில் காற்று வீசும்.

மேலும், மன்னார் வளைகுடா பகுதிகளில் இன்று மாலை முதல் நாளை காலை வரை அதிகபட்சமாக 70 கி.மீ. வேகத்திலும், அதன் பின்னர் வேகம் குறைந்து 60 கி.மீ. வேகத்திலும் சூறாவளி காற்று வீசக்கூடும்.

பேரிடர் மீட்பு படைகள்

புயல் காரணமாக ஏற்படும் பாதிப்புகளுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையை தமிழக அரசு மேற்கொள்ள தொடங்கியிருக்கிறது. அந்த வகையில் சென்னை தலைமை செயலகத்தில் தலைமை செயலாளர் இறையன்பு தலைமையில் நேற்று ஆய்வுக்கூட்டமும் நடந்தது. இதில் அனைத்து துறை சார்ந்த அதிகாரிகள், வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் உள்பட பலர் கலந்துகொண்டனர். இந்த கூட்டத்தில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து பேசப்பட்டன.

இந்த நடவடிக்கைகளை புயலினால் பாதிப்புக்குள்ளாகும் பகுதிகளாக அடையாளம் காணப்படும் மாவட்டங்களின் கலெக்டர்கள் பின்பற்ற அறிவுறுத்தப்பட்டு இருக்கின்றனர். மேலும், நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், கடலூர், மயிலாடுதுறை, சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களுக்கு தேசிய பேரிடர் மீட்பு படை மற்றும் தமிழ்நாடு பேரிடர் மீட்பு படையை சேர்ந்த 12 குழுக்கள் (மொத்தம் 396 பேர்) அனுப்பப்பட்டு, அங்கு அவர்கள் தயார்நிலையில் இருக்கின்றனர்.

பயணங்களை தவிர்க்க அறிவுறுத்தல்

புயல் கரையை கடக்கக்கூடிய நேரமான இன்று (வெள்ளிக்கிழமை) இரவு பொது மக்கள் தேவையற்ற பயணங்களை தவிர்க்க வேண்டும் என்றும், தேவையான காய்கறி, பால் போன்ற அத்தியாவசிய பொருட்களை வாங்கி வைத்து கொள்ள வேண்டும் என்றும் அரசு சார்பில் அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது.

இந்நிலையில் சென்னைக்கு தென்கிழக்கே 350 கி.மீ. தொலைவில் 'மாண்டஸ்' புயல் மையம் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இன்று காலை தீவிர புயலில் இருந்து புயலாக வலுவிலக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இன்று நள்ளிரவு முதல் புதுச்சேரி, ஸ்ரீஹரிக்கோட்டா இடையே 65 -85 கி.மீ. வேகத்தில் கரையை கடக்கும் என்று வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

சென்னையில் காற்று, மழை அதிகமாக இருக்கும்

புயலின் மையப் பகுதி மாமல்லபுரத்தில் கடக்கும் போது, புயலின் வட பகுதி சென்னையில் இருக்கும். பொதுவாக ஒரு புயல் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து வந்து, சென்னைக்கு அருகே கரையை கடக்கும் நேரத்தில் அதன் வட பகுதியில் காற்று, மழை அதிகமாக இருக்கும்.

ஏற்கனவே 1966, 1994, 2016-ம் ஆண்டுகளில் இதுபோன்று புயல் கடக்கும் போது சென்னையில் காற்று அதிகமாக இருந்தது. இதில் 2016-ம் ஆண்டு வர்தா புயல் சென்னைக்கு அருகே கரையை கடந்த போது சென்னையில் 100 கி.மீ.க்கு மேல் பலத்த காற்று வீசியது.

அதே போல, இன்று இரவு மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து வரும் மாண்டஸ் புயலும் சென்னைக்கு அருகே மாமல்லபுரத்தில் கடக்கும்போது, சென்னையில் காற்றும், மழையும் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் செய்திகள்