< Back
மாநில செய்திகள்
35-வயது ஆகியும் திருமணம் ஆகவில்லை.. தகராறு செய்த மகன்... தாய், பெரியம்மா எடுத்த கோர முடிவு
மாநில செய்திகள்

35-வயது ஆகியும் திருமணம் ஆகவில்லை.. தகராறு செய்த மகன்... தாய், பெரியம்மா எடுத்த கோர முடிவு

தினத்தந்தி
|
5 May 2024 8:23 AM IST

திருமணம் செய்து வைக்க கூறி தாயார் ருக்மணியிடம் சுரேஷ் தகராறு செய்து வந்துள்ளார்.

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியை அடுத்த தென்னாங்கூர் கிராமத்தைச் சேர்ந்த தெய்வசிகாமணி என்பவருக்கு முனியம்மாள் (வயது 65), ருக்மணி (61) என்ற 2 மனைவிகள். இருவரும் அக்காள்-தங்கையாவர். இருவருக்கும் தலா 3 மகன்கள் உள்ளனர்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன் கணவர் தெய்வசிகாமணி இறந்துவிட்டார். இதனால் முனியம்மாள் சென்னையில் உள்ள மகன் வீட்டில் வசித்து வருகிறார். ருக்மணியின் முதல் மற்றும் 2-வது மகன்களுக்கு திருமணம் ஆகி அவர்கள் தனித்தனியே வசித்து வருகின்றனர். இளைய மகன் சுரேஷ் (35). தச்சுத் தொழிலாளியாக உள்ளார்.

அவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.வேலைக்கு செல்லும் அவர் வீட்டிற்கும் பணம் தருவதில்லை. மது பழக்கத்துக்கு அடிமையான அவர் தினமும் குடித்துவிட்டு போதையில் வீடு திரும்புவார். அப்போது திருமணம் செய்து வை என்று கூறி தாயார் ருக்மணியிடம் தகராறு செய்வாராம்.

இந்த நிலையில் சுரேஷின் பெரியம்மா முனியம்மாள் நேற்று சென்னையில் இருந்து சொந்த ஊரான தென்னாங்கூர் கிராமத்திற்கு வந்திருந்தார். நேற்று முன்தினம் இரவு சுரேஷ் அவரது தாயாரிடம் மது குடிக்க பணம் கேட்டுள்ளார். அதற்கு ருக்மணி ''என்னிடம் பணம் இல்லை, ஏன் இப்படி குடித்துவிட்டு வந்து அடிக்கடி தகராறு செய்கிறாய். வேலைக்கு சென்று பணம் சம்பாதித்து என்னிடம் கொடுத்தால் தானே உனக்கு திருமணம் செய்து வைக்க முடியும்'' என்று தெரிவித்து உள்ளார்.

அப்போது வீட்டில் இருந்த பெரியம்மா முனியம்மாளிடமும் தொந்தரவு செய்தார். இதனால் கோபமடைந்த முனியம்மாள் கொதித்துக் கொண்டிருந்த எண்ணெயை சுரேஷ் தலையில் ஊற்றியதாக கூறப்படுகிறது. இதனால் எரிச்சல் தாங்கமுடியாமல் அலறிய சுரேஷ் அதன்பிறகும் தாய் ருக்மணியிடம் தொடர்ந்து பணம் கேட்டு நள்ளிரவு 12 மணி வரை தகராறு செய்து வந்துள்ளார்.

அவரை ருக்மணியும் பெரியம்மா முனியம்மாளும் அமைதிப்படுத்த பலமுறை முயன்றும் முடியவில்லை. மீண்டும் பணம் கேட்டு தொந்தரவு கொடுத்ததால் பொறுமை இழந்த தாய் ருக்மணி மற்றும் பெரியம்மா முனியம்மாள் ஆகியோர் அருகில் இருந்த கட்டையால் சுரேஷை அடித்ததோடு கல்லால் சரமாரியாக தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இதில் படுகாயம் அடைந்த சுரேஷ் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து தகவல் அறிந்த வந்தவாசி வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் விஸ்வநாதன், சப்-இன்ஸ்பெக்டர் ராம்குமார், சரவணன் மற்றும் போலீசார் நேற்று அதிகாலை சம்பவ இடத்திற்கு சென்று சுரேஷ் உடலை மீட்டனர்.

பின்னர் திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக ருக்மணி, மற்றும் முனியம்மாள் ஆகியோரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி இருவரையும் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

திருமணம் செய்து வைக்க கூறி தகராறு செய்த மகனை தாய், பெரியம்மா அடித்துக் கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்