< Back
மாநில செய்திகள்
வேடந்தாங்கல் சரணாலயத்தில் 35 ஆயிரம் வெளிநாட்டு பறவைகள்
மாநில செய்திகள்

வேடந்தாங்கல் சரணாலயத்தில் 35 ஆயிரம் வெளிநாட்டு பறவைகள்

தினத்தந்தி
|
28 Jan 2024 9:43 AM IST

தாயின் அரவணைப்பில் இருக்கும் குஞ்சுகள், இரை தேடிச் சென்ற தந்தையின் வருகைக்காக பசியுடன் காத்திருக்கும் காட்சிகளும் பாசத்தை பறைசாற்றுகின்றன.

சென்னை,

வந்தாரை வாழ வைக்கும் தமிழகம்... இது மனிதர்களை மட்டும் வாழ்விக்கும் மண் அல்ல, பறவைகளின் வாழ்விலும் வசந்தத்தை ஏற்படுத்தும். கண்டம் விட்டு கண்டம் தாண்டி கடல் கடந்து வரும் வெளிநாட்டு பறவைகளுக்கு வாழ்விடம் ஏற்படுத்திக்கொடுக்க, தமிழகத்தில் 13 இடங்களில் பறவைகள் சரணாலயம் இருக்கின்றன.

அதில், பழமை வாய்ந்தது, செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் ஆகும். சென்னையில் இருந்து 82 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள இந்த சரணாலயம் 73 ஹெக்டேர் பரப்பளவில் அமைந்துள்ளது.



பொதுவாக, நாடு விட்டு நாடு செல்பவர்களுக்கு பாஸ்போர்ட், விசா போன்ற ஆவணங்கள் அவசியம். ஆனால், பறவை இனங்கள் 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' என எங்கும் சுதந்திரமாக பறக்கலாம். அந்த நம்பிக்கையில்தான், ஆண்டுதோறும் வடகிழக்கு பருவமழை தொடங்கும் அக்டோபர் மாதத்தில் சைபீரியா, ஆஸ்திரேலியா, சீனா, பர்மா, இலங்கை, சுவீடன், நேபாளம், மியான்மர் உள்ளிட்ட நாடுகளில் இருந்து தமிழகத்தை நோக்கி பறவைகள் வரத்தொடங்கும்.

அந்த வகையில், இந்த ஆண்டு வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்துக்கு நத்தை குத்தி நாரை, சாம்பல் நாரை, கூழைக்கடா, வெள்ளை அரிவாள் மூக்கன், மிளிர் உடல் அரிவாள் மூக்கன், பாம்புத்தாரா, வர்ண நாரை, வக்கா, கரண்டிவாயன், தட்டைவாயன், ஊசிவால் வாத்து உள்பட 32 வகையான பறவைகள் வந்துள்ளன.

ஏரியில் நீர் முழுக்கொள்ளளவான 14½ அடியில் 14 அடி அளவுக்கு இருப்பதால், தண்ணீர் நிரம்பி காணப்படுகிறது. சுற்றியுள்ள ஏரிகளில் மதுராந்தகம் ஏரியை தவிர மற்றவைகளில் போதுமான அளவு நீர் இருப்பதால், வெளிநாட்டு பறவைகள் குதூகலம் அடைந்துள்ளன.

வேடந்தாங்கல் ஏரியில் உள்ள நீர்க்கடப்பை மரங்களில் கூடுகட்டி தங்கிய பறவைகள், தற்போது முட்டையிட்டு குஞ்சு பொரிக்க தொடங்கியுள்ளன. முட்டையில் இருந்து வெளியே வந்த குஞ்சுகள் தாய் அரவணைப்பில் புதிய உலகை காணும் காட்சி கொள்ளை அழகாக இருக்கிறது.

தற்போது, வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்துக்கு 35 ஆயிரம் வெளிநாட்டு பறவைகள் வந்துள்ளன. ஏரியில் நீர் நிரம்பி இருப்பதுபோல், பறவைகளின் கூட்டமும் நிரம்பி வழிகிறது. வானத்தில் வட்டமடிக்கும் பறவைகள், குட்டி விமானம் போல ரெக்கை விரித்து பறந்து வந்து மரங்களில் இறங்குவது, கண்களுக்கு விருந்தாக அமைகிறது. பறவைகளின் விதவிதமான குரல் ஒலி, காதுகளில் இசையை மீட்டச் செய்கிறது. தண்ணீரில் நீந்தும் வாத்து வகைகள், முத்து குளிப்பதுபோல் தண்ணீரில் மூழ்கி எழுந்து கண்ணாம்பூச்சி காட்டி ஆச்சரியப்படுத்தியது.



பொதுவாக, காலை 8 மணிக்கு முன்னால் சென்றால்தான் வெளிநாட்டு பறவைகளை முழுமையாக காண முடியும். அதற்கு பிறகு சென்றால், பெரும்பாலான பறவைகள் இரைதேடி அருகில் உள்ள நீர்நிலைகளுக்கு சென்றுவிடும். எனவே, குறைந்த அளவு பறவைகளையே காண முடியும்.

இதை நன்கு தெரிந்து வைத்திருக்கும் பறவை ஆர்வலர்கள் நேற்று காலை 6 மணிக்கே குடும்பத்துடன் வேடந்தாங்கல் சரணாலயத்துக்கு வந்திருந்தனர். பைனாக்குலர் கருவி மூலம் தொலைதூர மரங்களில் இருக்கும் பறவைகளை பார்த்து, அதன் பெயர்களை குறிப்பெடுத்துக்கொண்டனர். தங்களது குழந்தைகளுக்கும் பறவைகளை பற்றி விளக்கி கூறினர்.



அதுமட்டுமல்லாமல், நேற்று அரசு பள்ளி மாணவர்களும் நிறைய பேர் வேடந்தாங்கல் வந்திருந்தது, பறவைகள் மீதான தீராத காதல் இன்னும் குறையவில்லை என்பதை மெய்ப்பித்து காட்டியது. தற்போது, முட்டையிட்டு குஞ்சு பொரித்துள்ள பறவைகள், அடுத்த சில வாரங்களில் அந்த குஞ்சுகளுக்கு ரெக்கை விரித்து பறக்க கற்றுக்கொடுக்கும். ஒவ்வொரு கூட்டிலும் தலா 3 குஞ்சுகள் வரை இருக்கின்றன. தாயின் அரவணைப்பில் இருக்கும் குஞ்சுகள், இரை தேடிச் சென்ற தந்தையின் வருகைக்காக பசியுடன் காத்திருக்கும் காட்சிகளும் பாசத்தை பறைசாற்றுகின்றன.

பரபரப்பாக இயங்கிக்கொண்டிருக்கும் சென்னை போன்ற நகரவாசிகளுக்கு, மனம் மயக்கும் இடமாக வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் அமையும் என்பதை நம்பிக்கையுடன் கூறலாம்.

பறவைகள் சீசன் இன்னும் 2 மாதங்கள் நீடிக்கும் வாய்ப்பு இருக்கிறது. அதன்பிறகு, ஏப்ரல் -மே மாதங்களில் புதிய குடும்பத்துடன் தனது சொந்த நாடுகளுக்கு வெளிநாட்டு பறவைகள் மகிழ்ச்சியுடன் பயணத்தை மேற்கொள்ளும்.

பறவைகள் கணக்கெடுப்பு தொடக்கம்

தமிழகத்தில் ஆண்டுதோறும் பிப்ரவரி மாதம் பறவைகள் கணக்கெடுப்பு நடத்தப்படும். இந்த ஆண்டு ஒரு வாரத்துக்கு முன்பாகவே தொடங்கப்பட்டுள்ளது. நேற்று பழவேற்காடு ஏரியில், வகை வாரியாக பிரித்து வெளிநாட்டு பறவைகள் கணக்கெடுக்கப்பட்டன. வேடந்தாங்கல், கரிக்கிலி பறவைகள் சரணாலயங்களில் இன்று இந்த பணிகள் நடைபெறுகின்றன. இந்த பணியில், வனத்துறை அதிகாரிகள், ஊழியர்கள், பறவை ஆர்வலர்கள் ஈடுபட இருப்பதாக வனக்காப்பாளர் ரூபஸ் லாஸ்லி, வனக்காவலர் அமுதா ஆகியோர் தெரிவித்தனர்.

ஏரியில் மிதக்கும் பாசியை அகற்ற வேண்டும் - பறவை ஆர்வலர் நவநீதன்

சென்னை நாவலூரில் இருந்து தனது குழுவுடன் வேடந்தாங்கல் வந்திருந்த பறவை ஆர்வலர் நவநீதன் கூறிய

தாவது:-

நான் கடந்த 8 ஆண்டுகளாக வேடந்தாங்கல் சரணாலயம் வந்து கொண்டிருக்கிறேன். பறவையை பார்த்தாலே அதன் பெயரை கண்டுபிடித்து விடுவேன். இதுவரை, 19 வகையான பறவைகள் இங்கு இருப்பதை பார்த்தேன். அதன் பெயர்களையும் குறித்து வைத்துள்ளேன்.

அதிக ஒலி போன்ற காரணத்தால், சென்னை அருகேயுள்ள நீர்நிலைகளுக்கு வெளிநாட்டு பறவைகள் வருவது குறைந்திருக்கிறது. மற்றபடி, வேடந்தாங்கலுக்கு எப்போதும் போல பறவைகள் வருகிறது. மற்ற இடங்களுக்கு பணம் இருந்தால்தான் செல்ல முடியும். இங்குவர ரசிப்புத் தன்மை இருந்தால் போதும். வேடந்தாங்கல் ஏரியில் நிறைய பாசிகள் மிதக்கின்றன. இது, நீந்தும் பறவைகளுக்கு கஷ்டத்தை கொடுக்கும். அதை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்