< Back
மாநில செய்திகள்
இலவச பஸ் பயணம் மூலம் தினமும் 35 லட்சம் பெண்கள் பயன் அடைகின்றனர் - அமைச்சர் சிவசங்கர் தகவல்
மாநில செய்திகள்

இலவச பஸ் பயணம் மூலம் தினமும் 35 லட்சம் பெண்கள் பயன் அடைகின்றனர் - அமைச்சர் சிவசங்கர் தகவல்

தினத்தந்தி
|
11 Sep 2022 6:25 AM GMT

தமிழ்நாட்டில் பெண்களுக்கான இலவச பஸ் பயணத் திட்டத்தின் மூலம் தினமும் 35 லட்சம் பெண்கள் பயன் அடைந்து வருவதாக அமைச்சர் சிவசங்கர் தெரிவித்தார்.

சென்னை,

சாலை பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து வளர்ச்சித்துறை சார்பில் 2 நாள் மாநாடு பெங்களூர் தாஜ்வெஸ்டட் ஓட்டலில் மத்திய மந்திரி நிதின்கட்கரி தலைமையில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் பேசும்போது கூறியதாவது:-

சாலை விபத்துக்களை குறைக்க, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலுடன் தமிழக அரசு பல்வேறு நடைமுறைகளை செயல்படுத்தி வருகிறது. இன்னுயிர் காப்போம் திட்டத்தின் மூலம் சாலை விபத்தில் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு ஒரு ஆண்டில் ரூ.53 கோடி செலவிடப்பட்டு உள்ளது. இதன் மூலம் பல உயிர்கள் பாதுகாக்கப் பட்டுள்ளது.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நடைமுறை படுத்தி உள்ள பெண்களுக்கான இலவச பஸ் பயணம் திட்டத்தை தமிழக அரசு முனைப்புடன் செயல்படுத்தி வருகிறது. இதன் மூலம் கடந்த 15 மாதங்களில் 164 கோடி மகளிர் அரசுப் பேருந்தில் இலவச பயணம் செய்து பயன் அடைந்துள்ளனர்.

தினமும் 35 லட்சத்துக்கும் அதிகமான பெண்கள் இலவச பயணம் மூலம் பயன் அடைந்து தங்களது வாழ்வாதாரத்தை பெருக்கி வருகின்றனர். நாளுக்கு நாள் டீசல் விலை உயர்ந்து வந்தாலும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பஸ் கட்டணத்தை உயர்த்தக் கூடாது என்று அறிவித்து உள்ளார்.

இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் செய்திகள்