< Back
மாநில செய்திகள்
பெரம்பலூர்
மாநில செய்திகள்

பெரம்பலூரில் 35 ஏரிகள் நிரம்பி வழிகின்றன

தினத்தந்தி
|
15 Dec 2022 12:13 AM IST

பெரம்பலூர் மாவட்டத்தில் பெய்த பலத்தமழை காரணமாக 35 ஏரிகளில் தண்ணீர் நிரம்பி வழிகின்றன.

கனமழை பெய்தது

பெரம்பலூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கிய சிறிது நாட்களிலேயே லாடபுரம் பெரிய ஏரியும், லாடபுரம் கீழேரியும் நிரம்பின. பெரம்பலூர் வெள்ளந்தாங்கி அம்மன் ஏரி, அரணாரை நீலியம்மன்-செல்லியம்மன் ஏரி ஆகிய ஏரிகள் நிரம்பின. அதனைத்தொடர்ந்து சற்று இடைவெளிவிட்டு கடந்த 13-ந்தேதி கன மழை பெய்தது. பெரம்பலூரில் 2 மணிநேரம் மழை கொட்டியது. அதனைத்தொடர்ந்து இரவு வரையிலும் மழை விட்டுவிட்டு பெய்தது.

தொடர்மழையின் காரணமாக லாடபுரம் ஏரிகள், குரும்பலூர் ஏரி, செஞ்சேரி ஏரி, அரணாரை நீலியம்மன்-செல்லியம்மன் ஏரி, பெரம்பலூர் பெரியஏரி, வெள்ளந்தாங்கி அம்மன் ஏரி மற்றும் துறைமங்கலம் பெரிய ஏரி ஆகியவை மீண்டும் நிரம்பின.

தேங்காய் உடைத்து வழிபாடு

பெரம்பலூரில் உள்ள திரவுபதி குளம் என்றழைக்கப்படும் தெப்பக்குளம் நேற்று முன்தினம் முழுமையாக நிரம்பியது. மழை நீரும், காட்டாற்று ஓடைகளின் ஊற்றுநீரும் ஏரி, மதகுகளின் வழியே வழிந்தோடுவது கண்கொள்ளாக்காட்சியாக உள்ளது. பெரம்பலூர் பெரிய ஏரியில் நேற்று அதிகாலை பிரதான மதகில் நீர் வழிந்தோடியது. இதையடுத்து, பெரிய ஏரி ஆயக்கட்டு பகுதி விவசாயிகள், மதனகோபாலசுவாமி கோவில் பணியாளர்கள் பெரிய ஏரியில் நீர்நிலைக்கு தேங்காய் உடைத்தும் நிவேதனம் செய்தும் வழிபட்டனர். பின்னர் பூக்களை தூவி புதுவெள்ளநீரை வரவேற்றனர்.

பெரிய ஏரியில் கடை வழிந்தோடிய மழைநீரில் மீன்கள் அதிகம் தென்பட்டதால், மீன்பிடிப்பவர்கள் வலைகளை விரித்து மீன்களை பிடித்து சென்றனர். பள்ளி மாணவ-மாணவிகள் கூட்டம் கூட்டமாக வந்து பெரிய ஏரியில் நீர்வழிந்தோடியதை கண்டு ரசித்தனர்.

35 ஏரிகள் நிரம்பின

இதேபோல் வெள்ளந்தாங்கி அம்மன் ஏரியின் உபரிநீர் வாய்க்காலிலும், துறைமங்கலம் பெரிய ஏரி வழிந்தோடும் மதகு பகுதியிலும் இளைஞர்கள் ஆர்வமுடன் மீன்பிடிப்பில் ஈடுபட்டனர். பெரம்பலூர் டவுனில் பெய்த பலத்த மழை காரணமாகவும், பெரம்பலூர் பெரிய ஏரி நிரம்பி வழிந்தோடி வருவதாலும், பெரம்பலூரில் உள்ள ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் வெள்ளந்தாங்கி அம்மன் ஏரி மற்றும் துறைமங்கலம் பெரிய ஏரி ஆகியவை நிரம்பின.

பெரம்பலூர் மாவட்டத்தில் தமிழக அரசின் நீர்வள ஆதாரத்துறையின் மூலம் பராமரிக்கப்படும் ஏரிகள் மொத்தம் 73 உள்ளன. இவற்றில் 35 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டி தண்ணீர் நிரம்பி வழிந்தோடுகிறது. பென்னகோணம், வெங்கலம், பேரையூர் ஆகிய ஏரிகள் 80 சதவீதம் நீர் நிரம்பி உள்ளன. செங்குணம், அன்னமங்கலம், நாரணமங்கலம், காரை பெரியஏரி, சின்னாறு போன்ற ஏரிகள் 50 சதவீதத்திற்கு கீழ் தண்ணீர் நிரம்பி உள்ளன.

மேலும் செய்திகள்