< Back
மாநில செய்திகள்
காளைகள் முட்டியதில் 33 பேர் காயம்
புதுக்கோட்டை
மாநில செய்திகள்

காளைகள் முட்டியதில் 33 பேர் காயம்

தினத்தந்தி
|
7 March 2023 1:38 AM IST

காளைகள் முட்டியதில் 33 பேர் காயமடைந்தனர்.

ஆலங்குடி:

ஜல்லிக்கட்டு

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே மங்களாபுரத்தில் உள்ள முனீஸ்வரர் கோவில் மாசி மகத் திருவிழாவை முன்னிட்டு நேற்று வாடிவாசல் திடலில் ஜல்லிக்கட்டு நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி உறுதிமொழியை வாசிக்க மாடுபிடி வீரர்கள் அதனை கூறி உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். காளைகளுக்கும், மாடுபிடி வீரர்களுக்கும் உரிய பரிசோதனை செய்யப்பட்டு, ஜல்லிக்கட்டில் பங்கேற்க அனுமதி அளிக்கப்பட்டது.

இதையடுத்து ஜல்லிக்கட்டை சுற்றுச்சூழல்துறை அமைச்சர் மெய்யநாதன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். முதலில் வாடிவாசலில் இருந்து கோவில் காளை அவிழ்த்து விடப்பட்டது. இதைத்தொடர்ந்து திருச்சி, ராமநாதபுரம், மதுரை, சிவகங்கை, தஞ்சாவூர் உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து அழைத்து வரப்பட்ட ஜல்லிக்கட்டு காளைகள் வாடிவாசலில் இருந்து அவிழ்த்து விடப்பட்டன.

33 பேர் காயம்

சீறிப்பாய்ந்த காளைகளை வீரர்கள் போட்டி போட்டு அடக்க முயன்றனர். அவர்களை சில காளைகள் பந்தாடி, முட்டித்தூக்கி வீசின. இருப்பினும் வீரர்கள் காளைகளை அடக்கினர். ஜல்லிக்கட்டில் 539 காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. அவற்றை அடக்க 230 மாடுபிடி வீரர்கள் களம் கண்டனர். இதில் பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும், காளைகளை அடக்கிய மாடுபிடி வீரர்களுக்கும் குளிர்சாதன பெட்டி, ஆட்டுக்குட்டி, சைக்கிள், குத்துவிளக்கு, கட்டில், பீரோ, சில்வர் பாத்திரங்கள், மிக்சி, குக்கர் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் பரிசாக வழங்கப்பட்டது. மேலும் ரொக்கப்பரிசும் வழங்கப்பட்டது.

காளைகள் முட்டியதில் மாடுபிடி வீரர்கள் உள்பட 33 பேர் காயமடைந்தனர். அவர்களுக்கு அங்கு அமைக்கப்பட்டிருந்த முகாமில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் மேல் சிகிச்சைக்காக 8 பேர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த ஜல்லிக்கட்டை ஏராளமான மக்கள் கண்டு ரசித்தனர். ஆலங்குடி போலீஸ் துணை சூப்பிரண்டு தீபக் ரஜினி, இன்ஸ்பெக்டர் அழகம்மை மற்றும் கூடுதல் இன்ஸ்பெக்டர்கள், 200-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

மேலும் செய்திகள்