அரியலூர்
ரெயில் மறியலில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினர் 33 பேர் கைது
|ரெயில் மறியலில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினர் 33 பேர் கைது
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் எம்.பி. பதவி பறிக்கப்பட்டதை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் நேற்று தமிழகம் முழுவதும் ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் அரியலூரில் குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரெயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட ரெயில் நிலையம் முன்பு காங்கிரஸ் கட்சியினர் திரண்டனர். அங்கு அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் அவர்கள் ரெயில் நிலையத்திற்கு செல்ல முயன்றனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், அவர்களை தடுத்து மாவட்ட தலைவர் சங்கர், மாநில துணைத்தலைவர் ராஜேந்திரன், அரியலூர் நகர தலைவர் சிவக்குமார் உள்ளிட்ட குறிப்பிட்ட சிலரை மட்டும் அனுமதித்தனர். இதைத்தொடர்ந்து ரெயில் நிலையத்தில் 2-வது நடைமேடையில் குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரெயில் வந்தது. இதையடுத்து காங்கிரஸ் கட்சியினர் கொடிகளுடன் அந்த ரெயில் முன்பு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு, கட்சி கொடிகளுடன் தண்டவாளத்தில் நின்றபடி கோஷங்களை எழுப்பினர்.
பின்னர் ரெயில் புறப்படும் நேரத்தில், காங்கிரஸ் கட்சியினரை அங்கிருந்து போலீசார் வெளியேற்றினர். மேலும் மறியலில் ஈடுபட்ட 3 பெண்கள் உள்பட 33 பேரை போலீசார் கைது செய்து, வேனில் ஏற்றிச்சென்று ஒரு திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். பின்னர் மாலையில் அவர்கள் விடுவிக்கப்பட்டனர். இந்த மறியல் போராட்டத்தால் அரியலூர் ரெயில் நிலையத்தில் நேற்று காலை பரபரப்பு ஏற்பட்டது.
முன்னதாக ரெயில் என்ஜின் பகுதியில் இருந்து 10 அடி தூரத்திற்கு முன்பாகவே காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட அனுமதிக்கப்பட்டனர். மேலும் போலீஸ் துணை சூப்பிரண்டு சங்கர் கணேஷ் தலைமையில் அரியலூர் இன்ஸ்பெக்டர் கோபிநாத், கீழப்பழுவூர் இன்ஸ்பெக்டர் சகாய அன்பரசு, அரியலூர் போக்குவரத்து இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் ஆகியோர் தலைமையிலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.