சென்னை
சென்னை மாநகராட்சி அலுவலகங்களில் பணியாளர்களின் வருகை பதிவேட்டிற்காக 315 பயோ மெட்ரிக் எந்திரங்கள்
|சென்னை மாநகராட்சி அலுவலகங்களில் பணியாளர்களின் வருகை பதிவேட்டிற்காக 315 பயோ மெட்ரிக் எந்திரங்கள் பொருத்தும் பணி நடைபெற்று வருகின்றன.
இதுக்குறித்து பெருநகர சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
சென்னை மாநகராட்சி அலுவலகங்களில் பணியாளர்களின் வருகைப் பதிவானது பதிவேட்டில் கையொப்பமிடும் முறையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தூய்மைப் பணிகளில் ஈடுபடும் பணியாளர்களின் வருகைப் பதிவு ஒரு நாளைக்கு 2 முறை அதாவது பணி வருகையின்போது ஒரு முறையும், பணி முடிந்து திரும்பும்போது ஒரு முறையும் பெறப்படுகிறது. பணியாளர்களின் வருகைப் பதிவினை சரியான நேரத்தில் இருப்பதை உறுதி செய்ய மாநகராட்சியில் பயோ மெட்ரிக் முறையில் பதிவு செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி பயோ மெட்ரிக் முறையில் பணியாளரின் வருகை 'முகப்பதிவு' முறையில் பதிவு செய்யப்பட உள்ளது.
மாநகராட்சி அலுவலகங்களில் பயோ மெட்ரிக் வருகைப் பதிவு முறையை பின்பற்றும் வகையில், தலைமை அலுவலகத்தில் 10, வட்டார அலுவலகங்களில் 3, ஒரு மண்டல அலுவலகத்திற்கு தலா 2 என 15 மண்டல அலுவலகங்களில் 30, பகுதி அலுவலகங்களில் 47, வார்டு அலுவலகங்களில் 200, வாகன நிறுத்தங்களில் 20 மற்றும் இதர இடங்களுக்கு 5 என மொத்தம் 315 பயோ மெட்ரிக் எந்திரங்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன. மேற்குறிப்பிட்ட அலுவலகங்களில் பயோ மெட்ரிக் எந்திரங்கள் பொருத்தும் பணி தற்போது நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகள் முடிவடைந்தவுடன் விரைவில் பணியாளர்களின் வருகை, பயோ மெட்ரிக் முறையில் பதிவு செய்யப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.