கடலூர்
பிளஸ்-2 தேர்வை 31,054 பேர் எழுதினர்
|கடலூர் மாவட்டத்தில் பிளஸ்-2 தேர்வை 31 ஆயிரத்து 54 பேர் எழுதினர். தேர்வு மையத்தை மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம் ஆய்வு செய்தார்.
தமிழகம் முழுவதும் நேற்று பிளஸ்-2 மாணவர்களுக்கான அரசு பொதுத்தேர்வு தொடங்கியது. கடலூர் மாவட்டத்தில் இந்த தேர்வை எழுதுவதற்காக 245 பள்ளிகளை சேர்ந்த 16 ஆயிரத்து 166 மாணவர்கள், 16 ஆயிரத்து 429 மாணவிகள் என மொத்தம் 32 ஆயிரத்து 595 பேர் எழுத ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதற்காக 125 தேர்வு மையங்களும் அமைக்கப்பட்டு இருந்தது.
மாணவர்கள் காலை 9.40 மணியில் இருந்து 10 மணிக்குள் தேர்வு மையங்களுக்குள் சென்று விட வேண்டும் என்று அறிவிக்கப் பட்டாலும், காலை 8 மணிக்கே மாணவர்கள் வந்து விட்டனர். அவர்கள் பள்ளிகளில் அமைக்கப்பட்டு இருந்த தேர்வு மையங்களுக்கு வெளியே அமர்ந்து படித்துக் கொண்டிருந்தனர். தொடர்ந்து பள்ளிகளில் இறைவணக்கம் முடிந்ததும், காலை 9.40 மணிக்கு தேர்வு மையத்திற்குள் சென்றனர். வினாத்தாள் வழங்குதல், அதை படித்து பார்ப்பதற்கு நேரம் என 10.15 மணிக்கு தேர்வு எழுத தொடங்கினர்.
கலெக்டர் ஆய்வு
மொத்தம் 31,054 பேர் தேர்வை எழுதினர். 1541 போ் தோ்வு எழுத வரவில்லை. தேர்வை கண்காணிக்க 125 முதன்மை கண்காணிப்பாளர்கள், 125 துறை அலுவலர்கள், 22 வினாத்தாள் கட்டுக்காப்பாளர்கள், 28 வழித்தட அலுவலர்கள் அமைக்கப்பட்டு இருந்தனர். 1963 ஆசிரியர்கள் அறைக்கண்காணிப்பாளர்களாக நியமிக்கப்பட்டனர். அவர்கள் தேர்வு மையங்களை கண்காணித்தல், வினாத்தாள்களை போலீஸ் பாதுகாப்புடன் தேர்வு மையங்களுக்கு கொண்டு செல்லுதல், விடைத்தாளை கொண்டு வருதல் உள்ளிட்ட பணிகளை செய்தனர்.
இது தவிர பறக்கும் படை, நிலைப்படைக்கு 250 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு இருந்தனர். அவர்களும் தேர்வு மையங்களுக்கு சென்று மாணவர்கள் யாராவது காப்பி அடித்து எழுதுகிறார்களா? என்று கண்காணித்தனர். முன்னதாக கடலூர் பீச் ரோட்டில் உள்ள மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி தேர்வு மையத்தை மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். சொல்வதை எழுதும் ஆசிரியர்கள் மாணவர் களுக்காக தேர்வு எழுதியதையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பாதுகாப்பு
தேர்வு மையங்களில் அனைத்து அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டு உள்ளதாகவும், மாணவர்கள் எவ்வித அச்சமின்றியும் தேர்வு எழுத வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்தார். ஆய்வின் போது மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ராமகிருஷ்ணன் மற்றும் கல்வித்துறை அலுவலர்கள் உடனிருந்தனர். முன்னதாக அனைத்து தேர்வு மையங்களிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.