< Back
மாநில செய்திகள்
காளையார்கோவிலில்  3 ஆயிரம் ஆண்டுகள் பழமையான  கல்வட்ட எச்சங்கள் கண்டுபிடிப்பு
சிவகங்கை
மாநில செய்திகள்

காளையார்கோவிலில் 3 ஆயிரம் ஆண்டுகள் பழமையான கல்வட்ட எச்சங்கள் கண்டுபிடிப்பு

தினத்தந்தி
|
16 Sept 2023 12:45 AM IST

காளையார்கோவிலில் 3 ஆயிரம் ஆண்டுகள் பழமையான கல்வட்ட எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டது.


சிவகங்கை தொல்நடைக்குழு நிறுவனர் காளிராசா, செயலர் நரசிம்மன், கள ஆய்வாளர் சரவணன் ஆகியோர் காளையார் கோவில் அரசு மேல்நிலைப்பள்ளி மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன விளையாட்டு திடலில் கள ஆய்வு மேற்கொண்டனர். அப்போது 3 ஆயிரம் ஆண்டுகள் பழமையான கல்வட்ட எச்சங்கள் அடையாளம் இருப்பதை கண்ட பிடித்தனர். இதுகுறித்து சிவகங்கை தொல்நடைக் குழு நிறுவனர் காளிராசா கூறியதாவது:- .

பொதுவாக சங்க காலத்தை 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது என்பர். ஆனால் அதற்கும் ஆயிரம் ஆண்டுகள் பழமையானது பெருங்கற்காலம் எனலாம். நகர்ப்பகுதியிலே இக்கல்வட்டங்கள் காணப்படுவதால் சங்ககாலத்திற்கு முன்பிருந்தே இப்பகுதி மனிதர்களின் வாழ்விடப்பகுதியாக இருந்ததை அறிய முடிகிறது. இறந்த மனிதனுக்கு மீண்டும் வாழ்வு உண்டு என்ற நம்பிக்கையிலோ நல்லடக்கம் செய்யவோ பெருங்கற்களை கொண்டு ஈமச்சின்னங்களை அமைத்த காலங்களை பெருங்கற்காலம் என்கிறோம். காளையார்கோவில் தென்றல் நகரை அடுத்துள்ள அரசு மேல்நிலைப்பள்ளி விளையாட்டு திடலில் முழுதும் தரையில் புதைந்த நிலையில் கல்வட்டங்கள் எச்சங்களாக உள்ளன. இதன்மூலம் இப்பகுதி பெருங்கற்கால ஈமக்காடாக இருந்ததை அறிய முடிகிறது. மேலும் மேற்பரப்பிலே பெருங்கற்கள் இப்பகுதியில் சாலையோரங்களில் கிடப்பதும் இதற்கு கூடுதல் வலு சேர்க்கின்றன. இப்பகுதியில் நல்லேந்தல், அ. வேளாங்குளம் போன்ற இடங்களில் சிதைவுறாத கல்வட்டங்கள் பெருமளவில் காண கிடைப்பதும் குறிப்பிடத்தக்கது. பாண்டியன் கோட்டையை அகழாய்வு செய்ய தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசுவிடம் கோரிக்கை வைத்துள்ளோம். இந்நிலையில் இப்பகுதியில் கல்வட்ட எச்சங்கள் கிடைப்பத்திருப்பது மேலும் ஒரு தரவாக பார்க்கப்படும் என்று கூறினார்.

மேலும் செய்திகள்