விருதுநகர்
மலையில் தவித்த 3 ஆயிரம் பக்தர்கள் தரை இறங்கினர்
|சதுரகிரியில் காட்டுத்தீ கட்டுக்குள் வந்ததால், மலையில் தவித்த 3 ஆயிரம் பக்தர்கள் பத்திரமாக தரை இறங்கினர். அதேநேரத்தில் நேற்று சதுரகிரி செல்ல பக்தர்களுக்கு அனுமதி வழங்கவில்லை.
வத்திராயிருப்பு,
சதுரகிரியில் காட்டுத்தீ கட்டுக்குள் வந்ததால், மலையில் தவித்த 3 ஆயிரம் பக்தர்கள் பத்திரமாக தரை இறங்கினர். அதேநேரத்தில் நேற்று சதுரகிரி செல்ல பக்தர்களுக்கு அனுமதி வழங்கவில்லை.
சதுரகிரியில் காட்டுத்தீ
விருதுநகர் மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தரமகாலிங்க சுவாமி கோவில் அமைந்துள்ளது. அமாவாசை, பவுர்ணமி, பிரதோஷ வழிபாட்டு்க்காக பக்தர்கள் மலை ஏறி சதுரகிரி கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது.
நேற்று முன்தினம் ஆடி அமாவாசையை முன்னிட்டு 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் மலையேறி சாமி தரிசனம் செய்தனர்.
பிற்பகலில் மலையில் இருந்து தாணிப்பாறை அடிவாரப்பகுதிக்கு இறங்க தொடங்கினர். மாலை 6 மணி அளவில் சதுரகிரி மலையில் தவசிப்பாறை 5-வது பீட் வனப்பகுதியில் திடீரென தீப்பிடித்தது.
இந்த காட்டுத்தீ வேகமாக பரவியதால் பக்தர்கள் மலையில் இருந்து இறங்க தடை விதிக்கப்பட்டது. இதையடுத்து அவர்களை கோவிலில் உள்ள மண்டபங்களில் வனத்துறையினர் தங்க வைத்தனர். 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் தரை இறங்க முடியாமல் தவித்தனர்.
பக்தர்கள் தவிப்பு
தீயை அணைக்கும் முயற்சியில் வனத்துறையினர் தொடர்ந்து ஈடுபட்டனர். 20 மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
பின்னர் கோவிலில் இருந்து பக்தர்கள் தரையிறங்க அனுமதிக்கப்பட்டனர். மலைப்பாதை வழியாக அனைவரும் பத்திரமாக தரை இறங்கி வந்தனர்.
அனுமதி மறுப்பு
இருந்தாலும் வனப்பகுதியில் காட்டுத்தீ தொடர்ந்து எரிந்து வருவதால், நேற்று சதுரகிரி கோவிலுக்கு பக்தர்கள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டது. இதையடுத்து சதுரகிரி செல்வதற்காக வந்த நூற்றுக்கணக்கான பக்தர்கள் தாணிப்பாறை அடிவாரப் பகுதியில் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். தீ பரவாமல் தடுக்கும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.