சென்னை
வடகிழக்கு பருவமழையையொட்டி சென்னையில் 300 குடிநீர் மாதிரி தரம் பரிசோதனை - குடிநீர் வாரியம் அதிரடி நடவடிக்கை
|வடகிழக்கு பருவமழையையொட்டி சென்னையில் குடிநீர் வாரியம் சார்பில் 300 குடிநீர் மாதிரிகளின் தரத்தை சேகரித்து பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
வடகிழக்கு பருவமழையையொட்டி குடிநீரின் தரத்தை உறுதிசெய்ய ஆய்வகம் மூலம் நாளொன்றுக்கு 300 குடிநீர் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு குடிநீரின் தரம் பரிசோதிக்கப்படுகிறது. குடிநீரில் குளோரின் அளவு மற்றும் அதில் கலந்துள்ள திடப்பொருள்களின் அளவு குறித்து 3 ஆயிரம் மாதிரிகள் எடுக்கப்பட்டு பரிசோதிக்கப்படுகிறது. தேவைக்கேற்ப ஆங்காங்கே குளோரின் சேர்ப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
குடிநீர் விநியோக நிலையங்களுக்கு தேவையான பிளீச்சிங்பவுடர், படிகாரம், சுண்ணாம்பு போன்ற ரசாயனபொருட்கள் தேவையான அளவு வைக்கப்பட்டுள்ளது. மழைக்காலங்களில் குடிநீர் விநியோக நிலையங்களில் தேங்கும் மழைநீரை இறைக்க 16 பெரிய நீர் உறிஞ்சும் எந்திரங்கள் மற்றும்
92 சிறிய நீர் உறிஞ்சும் எந்திரங்கள் குடிநீர் விநியோக நிலையங்களில் தயார் நிலையில் வைக்கப்பட்டடுள்ளது.
கழிவு நீர் அடைப்பு ஏற்படும் 502 இடங்கள் கண்டறியப்பட்டு, 282 தூர்வாரும் எந்திரங்கள், 125 ஜெட்ராடிங் எந்திரங்கள் 4 சிறிய ஜெட்ராடிங் எந்திரங்கள், 32 ஜெட்ராடிங் மற்றும் உறிஞ்சும் எந்திரங்கள் மற்றும் 57 கழிவுநீர் உறிஞ்சும் எந்திரங்கள் ஆக மொத்தம் 500 கழிவுநீர் எந்திரங்கள் மூலம் தூர்வாரப்பட்டு உள்ளது. கழிவு நீர் அடைப்பு, கழிவுநீர் தேக்கம், மழைநீர் அகற்றும் பணிகளை சீர் செய்யும் வகையில் 2 ஆயிரம் களப்பணியாளர்கள் 24 மணி நேரமும் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
கூடுதலான கழிவுநீர் ஊர்திகள் தேவையிருப்பின் அங்கீகரிக்கப்பட்டவர்களிடமிருந்து வாடகைக்கு எடுத்துக்கொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது. கழிவுநீர் உந்துதல், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களில் உள்ள அனைத்து எந்திரங்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
இரவு நேரங்களில் மேற்கொள்ளப்படும் களப்பணிகளை ஆய்வு செய்ய அனைத்து பகுதிகளிலும் செயல் பொறியாளர்கள் சிறப்பு அலுவலராக செயல்பட்டு வருகின்றனர் அனைத்து பகுதிகளிலும் தேவையான அளவுக்கு குழாய்கள் இருப்பில் வைக்கப்பட்டுள்ளது. குடிநீர் நீரேற்று நிலையம் மற்றும் கழிவு நீர் உந்து நிலையம் ஆகிய இடங்களில் மணல் மூட்டைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
சென்னை குடிநீர் வாரிய தலைமை அலுவலகத்தில் புகார் பிரிவு 24 மணிநேரமும் செயல்பட்டு வருகிறது பொதுமக்கள் தங்களுடைய குடிநீர் மற்றும் கழிவுநீர் புகார்களை 044-4567 4567 (20 இணைப்புகள்) மற்றும் கட்டணமில்லா எண் 1916 தொடர்பு கொண்டு பயனடையலாம் என்று சென்னை குடிநீர் வாரிய அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.