திருச்சி
300 ஏக்கர் மக்காச்சோள பயிர்கள் தீப்பற்றி எரிந்து நாசம்
|300 ஏக்கர் மக்காச்சோள பயிர்கள் தீப்பற்றி எரிந்து நாசமானது.
தீப்பற்றி எரிந்தது
திருச்சி மாவட்டம், புள்ளம்பாடி ஒன்றியம், மேலரசூர் கிராமத்தில் உள்ள காடுகளில் மக்காச்சோளம், பருத்தி போன்ற பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டிருந்தன. இதில் சில பகுதிகளில் பயிர்கள் அறுவடை செய்யப்பட்டும், சில பகுதிகளில் அறுவடை செய்யப்படாமலும் உள்ளது.
இந்நிலையில் மேலரசூர்- கல்லக்குடி தட்டான் ஓடைக்கு வடக்குபுறமும், மேலரசூர் கிராமத்தின் தெற்கு புறமும், ஆமரசூரில் மேற்கு புறமும் எல்லங்குளம் உள்ளிட்ட சுமார் 300 ஏக்கருக்கு மேல் மக்காச்சோளம் பயிரிடப்பட்டிருந்த காடுகளில் தீப்பற்றி எரிந்தது. காற்றின் காரணமாக தீ மளமளவென பரவியது. இதனால் அப்பகுதியில் கரும்புகை எழுந்தது.
7 மணி நேரம் போராட்டம்
அந்த வழியாக சென்றவர்கள் இது பற்றி கிராம நிர்வாக அலுவலர் வனிதாவிடம் தெரிவித்தனர். இது பற்றி அவர் கல்லக்குடி போலீஸ் நிலையத்திற்கும், புள்ளம்பாடி தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் தெரிவித்தார். ஆனால் புள்ளம்பாடி தீயணைப்பு வாகனம் வேறு ஒரு பகுதிக்கு சென்றிருந்ததால், அருகே டால்மியா சிமெண்டு ஆலையில் உள்ள தீயணைப்பு வாகனமும், லால்குடி தீயணைப்பு நிலைய வாகனமும் அங்கு வரவழைக்கப்பட்டன.
பின்னர் புள்ளம்பாடி தீயணைப்பு நிலைய வாகனமும் அங்கு விரைந்து வந்தது. இதையடுத்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் போராடினார்கள். சுமார் 7 மணி நேர போராட்டத்திற்கு பின்னர் தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
மக்காச்சோளம் எரிந்து நாசம்
இருப்பினும் சுமார் 300 ஏக்கரில் அறுவடை செய்யப்படாமல் இருந்த மக்காச்சோள பயிர்களும், 60 ஏக்கரில் அறுவடை செய்து குவித்து வைக்கப்பட்டிருந்த மக்காச்சோளமும் எரிந்து நாசமானது. இதைக்கண்ட விவசாயிகள் கதறினர். இதற்கிடையே ஒருசில விவசாயிகள், அறுவடை செய்யப்பட்ட பகுதிகளில் இருந்த மக்காச்சோளத்தை டிராக்டர் மூலம் அங்கிருந்து எடுத்து சென்றனர்.
இதற்கிடையே தீ விபத்து பற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த லால்குடி கோட்டாட்சியர் வைத்தியநாதன், தாசில்தார் செசிலினாசுகந்தி, மண்டல துணை தாசில்தார் சங்கரநாராயணன் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டு தீயணைப்பு வீரர்கள் மற்றும் வருவாய்த்துறை அலுவலர்களுக்கு உரிய ஆலோசனை வழங்கினார்கள். பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஆறுதல் கூறினார்கள். மேலும் புள்ளம்பாடி வேளாண்மை துறை உதவி இயக்குனர் வேல்முருகன், உதவி அலுவலர்கள் சுதாகர், ரகுபதி ஆகியோர் தீ விபத்து ஏற்பட்ட பகுதிக்கு வந்து பார்வையிட்டனர்.
இழப்பீட்டு தொகை
இது குறித்து லால்குடி கோட்டாட்சியர் வைத்தியநாதன் கூறுகையில், வருவாய்த்துறை அலுவலர்களை கொண்டு பாதிக்கப்பட்ட விவசாயிகள் மற்றும் நிலம் குறித்த புள்ளி விவரம் கணக்கெடுக்கப்படும். மேலும் மேலரசூர் பகுதியில் பயிர் காப்பீடு செய்துள்ள விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு திட்டம் மூலம் இழப்பீட்டு தொகை வழங்குவதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும், என்று கூறினார். அப்போது ஊராட்சி தலைவர் செல்லமுத்து, ஒன்றிய கவுன்சிலர் வடிவேலு உள்பட பலர் உடனிருந்தனர். மேலும் கல்லக்குடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் கோபிநாத், விஜயகுமார் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தீப்பற்றியதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தினர்.