< Back
மாநில செய்திகள்
30 ஆண்டுகளுக்கு முன்பு இறந்த மகளுக்கு பெற்றோர் நடத்திய பேய் திருமணம் - சமூக வலைத்தளங்களில் வைரல்
மாநில செய்திகள்

30 ஆண்டுகளுக்கு முன்பு இறந்த மகளுக்கு பெற்றோர் நடத்திய 'பேய் திருமணம்' - சமூக வலைத்தளங்களில் வைரல்

தினத்தந்தி
|
15 May 2024 4:45 AM IST

இறந்த மகளுக்கு உயிரிழந்த இளைஞரை மணமகனாக உருவகப்படுத்தி பெற்றோர் நடத்திய வினோத திருமணம் அரங்கேறி உள்ளது.

பெங்களூரு,

கர்நாடக கடலோர மாவட்டங்களில் வசித்து வரும் துளு மொழி பேசும் மக்கள் வினோத சடங்கு ஒன்றை கடைபிடித்து வருகிறார்கள். அதாவது தங்கள் வீட்டில் உள்ள இளம்பெண் திருமணமாகாமல் இறந்துவிட்டால் அவருக்கு வரன் தேடி திருமணம் செய்து வைத்து அந்த சடங்கை நிறைவேற்றுகிறார்கள். இதில் விசேஷம் என்னவென்றால் அந்த மணமகனும் திருமணம் ஆவதற்கு முன்பே இறந்தவராக இருக்க வேண்டும். தொன்றுதொட்டு அவர்கள் இந்த சடங்கை கடைபிடித்து வருவதாக கூறப்படுகிறது.

திருமணம் ஆகாமல் இறந்த தங்கள் மகளின் ஜாதகம் மற்றும் சாதி, குலம் உள்ளிட்டவைகள், திருமணம் ஆகாமல் உயிரிழந்த வாலிபரின் ஜாதகத்துடன் ஒத்துப்போனால், அந்த வாலிபருக்கு திருமணம் செய்து வைப்பதுபோல் சடங்கை நிறைவேற்றுகிறார்கள்.

பெண் வீட்டார் திருமணத்துக்கு வரன் தேடுவதுபோல் செய்தித்தாள் மற்றும் திருமண புரோக்கர் மூலம் வரன் தேடி, பின்னர் இரு வீட்டாரும் பேசி மணப்பெண்-மணமகனுக்கான பட்டுப்புடவை, பட்டு வேட்டி மற்றும் இதர பொருட்களை படைத்து திருமண சடங்கை நிறைவேற்றுகிறார்கள்.

இதன்மூலம் தங்களது ஆசை நிறைவேறாமல் ஆவியாய் அலையும் ஆத்மாக்கள் சாந்தி அடையும் என்று துளு மக்களால் நம்பப்படுகிறது. இந்த திருமணத்தை அவர்கள் 'குலேய் (பேய்) திருமணம்' என்று அழைக்கிறார்கள்.

இதுபோல் தட்சிண கன்னடா மாவட்டம் புத்தூர் பகுதியில் ஒரு சம்பவம் நடந்துள்ளது. புத்தூர் பகுதியில் வசித்து வரும் துளு மொழி பேசும் தம்பதிக்கு ஒரு மகள் இருந்தாள். கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு அந்த சிறுமி இறந்துவிட்டாள். இந்த நிலையில் அவளுக்கு பேய் திருமணம் செய்து வைக்க குடும்பத்தினர் முடிவு செய்தனர்.

அதற்காக அவர்கள் செய்தித்தாள் ஒன்றில் பேய் திருமணத்துக்காக இளம்பெண்ணுக்கு வரன் வேண்டும் என்று கேட்டு விளம்பரம் செய்திருந்தனர். அதன்பேரில் அந்த தம்பதியை, மணமகன் வீட்டார் அணுகினர். பின்னர் இருவீட்டாரும் பேசி பேய் திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர்.

இந்த திருமணத்தில், மற்ற திருமணங்களைப் போன்றே நிச்சயதார்த்தம் உள்ளிட்ட அனைத்து சடங்குகளும் நடத்தப்பட்டன. ஜவுளியும் எடுக்கப்பட்டது. நேற்று முன்தினம் இருவீட்டாரும் சேர்ந்து பேய் திருமண சடங்கை செய்து முடித்தனர். அப்போது மணப்பெண்ணுக்கான பட்டுப்புடவை, அலங்கார பொருட்கள் மற்றும் மணமகனுக்கான பட்டுவேட்டி, சட்டை உள்ளிட்டவைகளை படைத்து, அதன் மீது மாங்கல்யத்தையும் வைத்து இறந்தவர்களை நினைவுகூர்த்து வழிபட்டனர். இந்த வினோத திருமணத்தைக் காண அங்கு ஏராளமானோர் திரண்டனர். இதையடுத்து இரு குடும்பத்தினரும் தங்கள் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் என 50 பேரை மட்டும் அழைத்து திருமண சடங்கையும் முடித்து அவர்களுக்கு விருந்து அளித்தனர்.

இந்த திருமணம் மூலம் இறந்துபோன தங்களது மகன், மகளின் ஆன்மாக்கள் அமைதி பெறும் என்று அவர்கள் கூறினர். தற்போது இந்த திருமணம் தொடர்பான புகைப்படமும், வீடியோக்களும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி பலரையும் வியப்படைய செய்துள்ளது.

மேலும் செய்திகள்