சென்னை
என்ஜினீயர் வீட்டில் 30 பவுன் நகை திருட்டு
|சென்னை கொளத்தூர் அருகே என்ஜினீயர் வீட்டில் 30 பவுன் நகை திருடி சென்ற மர்மநபர்களை போலீசார் தேடிவருகின்றனர்.
சென்னை கொளத்தூரை அடுத்த ராஜமங்கலம் செந்தில் நகரைச் சேர்ந்தவர் ரூப் கிருஷ்ணா (வயது 44). என்ஜினீயரான இவர், சிறுசேரியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். கடந்த 26-ந் தேதி இவர், வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் கேரளா சென்று விட்டார். நேற்று முன்தினம் இரவு அவரது உறவினர் ஒருவர் வந்து பார்த்தபோது, ரூப் கிருஷ்ணா வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்மநபர்கள், பீரோவில் இருந்த 30 பவுன் தங்க நகைகள், ரூ.5 ஆயிரத்தை திருடிச்சென்று விட்டது தெரிந்தது.
பெரம்பூர் பாரதி சாலை அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் ராஜ்குமார் (40). இவருடைய மனைவி, பிள்ளைகள் திருப்பதி சென்று உள்ளனர். வீட்டில் தனியாக இருந்த இவர், நேற்று முன்தினம் வீட்டின் முன்பக்க இரும்பு கதவை பூட்டிவிட்டு கடைக்கு சென்றார். பின்னர் திரும்பி வந்து பார்த்தபோது வீட்டுக்குள் மர்மநபர்கள் புகுந்து இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து கூச்சலிட்டார். உடனே வீட்டில் இருந்த மர்மநபர்கள், ராஜ்குமாரை கீழே தள்ளிவிட்டுவிட்டு 20 பவுன் நகையுடன் தப்பிச்சென்று விட்டனர். இதுபற்றி செம்பியம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, நகையை திருடிய வடிவேல் பாண்டியன் (31), சாகுல் ஹமீது (22) ஆகியோரை கைது செய்தனர்.