கடலூர்
சிதம்பரத்தில்மோட்டார் சைக்கிள் திருட்டில் ஈடுபட்ட 3 வாலிபர்கள் கைது :14 வாகனங்களை போலீசார் மீட்டனர்
|சிதம்பரத்தில் மோட்டார் சைக்கிள் திருட்டில் ஈடுபட்ட 3 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். மேலும் 14 வாகனங்களை போலீசார் மீட்டனர்.
சிதம்பரம்,
சிதம்பரம் சின்ன செட்டி தெரு அனுகிரக அப்பார்ட்மெண்டில் வசித்து வரும் கோவிந்தராஜ் மகன் முரளி (வயது 34). இவருடைய மோட்டார் சைக்கிளை வீட்டில் நிறுத்தி வைத்திருந்த போது மர்ம நபர்கள் திருடி சென்றுவிட்டனர். இதுகுறித்து சிதம்பரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.
இந்த நிலையில் சிதம்பரம் மேல வீதியில் சிதம்பரம் குற்றப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ் முருகன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் பாபு மற்றும் தனிப்படை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
3 பேர் கைது
அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த பெரிய குறிச்சி புதுநகர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த சின்னசாமி மகன் கலைவாணன் (23), கொத்தட்டை சின்ன குமட்டி கிராமம் கிணற்றங்கரை பகுதியை சேர்ந்த நாகப்பன் மகன் நிதிஷ் குமார் (25), அதே பகுதி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த சுந்தரம் மகன் சூர்யா (21) ஆகியோரை பிடித்து விசாரித்தனர். அதில் அவர்கள் பல்வேறு இடங்களில் வீடுகளில் நிறுத்தி வைத்திருக்கும் மோட்டார் சைக்கிள்களை திருடி சென்று, விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து 3 பேரையும் போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்து 14 மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்தனர்.