கள்ளக்குறிச்சி கலவரம்: பொருட்களை சேதப்படுத்திய 3 வாலிபர்கள் கைது
|கள்ளக்குறிச்சி கலவரத்தில் பள்ளி கட்டிடம், பொருட்களை அடித்து நொறுக்கி சேதப்படுத்திய 3 வாலிபர்களை சிறப்பு புலனாய் போலீசார் கைது செய்தனர்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம, சின்னசேலம் அடுத்த கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடந்த கலவரத்தின் போது அந்த பள்ளி வகுப்பறை சொத்துக்களை உடைத்து சேதப்படுத்திய விவகாரத்தில் வீடியோ பதிவுகளின் படி அடையாளம் கண்டு சிறப்பு புலனாய்வு குழு போலீசார் விசாரணையில் ஈடுபட்டு வந்தனர்.
இந்த நிலையில் சங்கராபுரம் பகுதியைச் சேர்ந்த குமரேசன் மகன் ராஜ்குமார் (வயது 24) ரவி மகன் கார்த்தி (25) ஆகிய இருவரும் கலவரத்தில் ஈடுபட்டு பள்ளியில் மாணவர்கள் அமரும் பெஞ்சுகளை அடித்து நொறுக்கி தூக்கி வீசி சேதப்படுத்தும் காட்சிகளை வீடியோ பதிவுகள் மூலம் போலீசார் கண்டு இன்று கைது செய்தனர்.
இதே போல கலவரத்தன்று பள்ளியின் கட்டிடத்தை இடித்து சேதப்படுத்தும் வீடியோ பதிவில் உள்ள கடலூர் மாவட்டம் வண்டி பாலத்தைச் சேர்ந்த இளங்கோ மகன் மனீஷ் (26) என்பவரையும் சிறப்பு புலனாய்வு போலீசார் கைது செய்தனர்.
மேலும் கலவரத்தில் ஈடுபட்டவர்களை அடையாளம் கண்டு கைது செய்வதற்காக, சிறப்பு புலனாய்வு போலீசார் பள்ளியில் நடந்த கலவர சம்பவங்களின் போது எடுக்கப்பட்ட பல்வேறு வீடியோ பதிவுகளை கண்காணித்து, அதில் ஈடுபட்ட வன்முறையாளர்களின் அடையாளங்கள் தெரிந்து, பெயர் முகவரிகளை சேகரித்து கைது செய்யும் நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட்டு தொடர்ந்து தேடி வருகின்றனர்.