திருச்சி
போதை மாத்திரை விற்ற 3 வாலிபர்கள் கைது
|போதை மாத்திரை விற்ற 3 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
பழக்கடை
திருச்சி அரியமங்கலம் காமராஜ் நகர் முகமது அலி தெரு பகுதியை சேர்ந்தவர் முகமது யாசின் (வயது 49). இவர் அரியமங்கலம் காமராஜ் நகர் பகுதியில் பழக்கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில் முகமது யாசின் பழக்கடைக்கு அதே பகுதியை சேர்ந்த 3 வாலிபர்கள் வந்து நின்று கொண்டிருந்தனர்.
அப்போது முகமது யாசின் அந்த வாலிபர்களிடம் எந்த வேலைக்கும் செல்லாமல் இப்படி ஊர் சுற்றுகிறீர்களே என கேட்டுள்ளார்.
போதை மாத்திரைகள்
அப்போது அந்த வாலிபர்கள் நாங்கள் போதை மாத்திரை விற்பனை செய்து வருகிறோம் என கூறியுள்ளனர். மேலும் 2 போதை மாத்திரைகளை முகமது யாசினிடம் கொடுத்துள்ளனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த முகமது யாசின் இதுகுறித்து அரியமங்கலம் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் திருவானந்தம் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.
வாலிபர்கள் கைது
பின்னர், மாத்திரைகளுடன் நின்று கொண்டிருந்த 3 பேரையும் கைது செய்தனர். விசாரணையில் அவர்கள் திருச்சி அரியமங்கலம் காமராஜர் நகர் கலாம் ஆசாத் தெருவை சேர்ந்த அம்ருதீன் (22), அரியமங்கலம் நெடுஞ்செழியன் தெருவைச் சேர்ந்த சாகுல் ஹமீது என்கிற பிரியாணி (22), அரியமங்கலம் திருவள்ளுவர் தெரு பகுதியைச் சேர்ந்த முகமது சித்திக் (24) என்பது தெரியவந்தது.
இதையடுத்து அவர்களிடம் இருந்த 40 போதை மாத்திரைகள் மற்றும் ஒரு செல்போன், 600 ரூபாய், ஒரு ஆட்டோ ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.