சேலம்
மரம் வெட்டும் தகராறில்தொழிலாளியை கத்தியால் குத்தியவருக்கு 3 ஆண்டு சிறைசேலம் கோர்ட்டு தீர்ப்பு
|மரம் வெட்டும் தகராறில் தொழிலாளியை கத்தியால் குத்தியவருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து சேலம் கோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது.
சேலம்,
ஏற்காடு செங்கலத்துப்பாடி பகுதியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். மரம் வெட்டும் கூலித்தொழிலாளியான இவர், தேயிலை தோட்டத்தில் உள்ள மரங்களை வியாபாரிகளுக்கு வாங்கி விற்பனை செய்யும் தொழிலில் ஈடுபட்டு வந்தார். இவர் கடந்த 2019-ம் ஆண்டு அதேபகுதியை சேர்ந்த தங்கவேலு என்பவரிடம் ரூ.3 ஆயிரத்தை கொடுத்து ஒரு சவுக்கு மரத்தை வெட்டுவதற்கு பேசி முடித்தார். ஆனால் பணத்தை வாங்கிக்கொண்டு மரத்தை வெட்டுவதற்கு அனுமதிக்கவில்லை. இதனால் பாலகிருஷ்ணனுக்கும், தங்கவேலுவுக்கும் இடையே முன்விரோதம் ஏற்பட்டது.
இந்த நிலையில் கடந்த 2019-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 12-ந் தேதி பாலகிருஷ்ணன் தனது வீட்டின் வெளியே நின்றபோது, அங்கு வந்த தங்கவேல் திடீரென மரம் வெட்டும் கத்தியால் அவரை கழுத்து பகுதியில் சரமாரியாக குத்தினார். இந்த தாக்குதலில் படுகாயம் அடைந்த அவர் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். இதுகுறித்து பாலகிருஷ்ணனின் மனைவி சரஸ்வதி ஏற்காடு போலீசில் அளித்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு சேலம் தலைமை குற்றவியல் கோர்ட்டில் நடந்து வந்தது. நேற்று இந்த வழக்கு நீதிபதி கிறிஸ்டல்பபிதா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, அவர் முன்விரோத தகராறில் பாலகிருஷ்ணனை கத்தியால் குத்திய தங்கவேலுவுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.