< Back
மாநில செய்திகள்
கொலை முயற்சி வழக்கில் தந்தை, மகன்களுக்கு 3 ஆண்டு சிறை - திருத்தணி கோர்ட்டு தீர்ப்பு
திருவள்ளூர்
மாநில செய்திகள்

கொலை முயற்சி வழக்கில் தந்தை, மகன்களுக்கு 3 ஆண்டு சிறை - திருத்தணி கோர்ட்டு தீர்ப்பு

தினத்தந்தி
|
17 Oct 2023 2:40 PM IST

கொலை முயற்சி வழக்கில் தந்தை, மகன்கள் என 3 பேருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து திருத்தணி கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.

திருத்தணி நகராட்சி தணிகை மீனாட்சி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் மணிவண்ணன் (வயது 30). இவர் சினிமா தியேட்டரில் மேலாளராக பணியாற்றி வருகிறார். இவரிடம் திருத்தணி காந்தி ரோடு பகுதியைச் சேர்ந்த பிரபாகரன் (43) என்பவர் கடனாக ரூ.70 ஆயிரம் பணம் பெற்றார். பலமுறை பணம் திருப்பி கேட்டும் பிரபாகரன் கொடுக்காமல் அலைக்கழித்து வந்தார்.

இந்நிலையில் 2012-ம் ஆண்டு அன்று மணிவண்ணன் சினிமா தியேட்டரில் வேலை முடிந்ததும் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தபோது அந்த வழியாக வந்த பிரபாகரன் அவரது மகன்கள் குமார், மணிகண்டன் ஆகியோரிடம் மணிவண்ணன் பணம் கேட்டு உள்ளார். இதில் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது.

இதில் பிரபாகரன் மற்றும் அவரது 2 மகன்களும் சேர்ந்து மணிவண்ணனை தாக்கியுள்ளனர். மணிவண்ணனின் அண்ணன் கமலக்கண்ணன் என்பவர் தம்பியை காப்பாற்ற முயற்சி செய்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பிரபாகரன் மற்றும் அவரது மகன்கள் இருவரையும் இரும்பு கம்பியால் தலையில் தாக்கி விட்டு தப்பி ஓடினர்.

இதுகுறித்து மணிவண்ணன் திருத்தணி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். கொலைமுயற்சி வழக்கு பதிந்த போலீசார் 3 பேரையும் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு கடந்த 11 ஆண்டுகளாக திருத்தணி சார்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கின் வாதங்கள் முடிவுற்ற நிலையில் சார்பு நீதிபதி காயத்திரி தேவி, மணிவண்ணன், கமலக்கண்ணன் ஆகிய இருவரை தாக்கிய வழக்கில் பிரபாகரன், குமார், மணிகண்டன் ஆகிய 3 பேருக்கும் 3 ஆண்டு கடுங்காவல் தண்டணையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார்.

மேலும் செய்திகள்