ராணிப்பேட்டை
குழந்தை தொழிலாளர்களை பணியில் அமர்த்தினால் 3 ஆண்டு சிறை தண்டனை
|குழந்தை தொழிலாளர்களை பணியில் அமர்த்தினால் 3 ஆண்டு சிைற தண்டனை விதிக்கப்படும் என ராணிப்பேட்டையில் பிரசார வாகனத்தை தொடங்கி வைத்து கலெக்டர் வளர்மதி பேசினார்.
குழந்தை தொழிலாளர் ஒழிப்புமுறை
உலக குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினத்தையொட்டி ராணிப்பேட்டை முத்துக்கடை பஸ் நிறுத்தத்தில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு துறையின் மூலம் குழந்தை தொழிலாளர்கள் ஒழிப்பு விழிப்புணர்வு பிரசார வாகன தொடக்க நிகழ்ச்சி நடந்தது.
கலெக்டர் வளர்மதி தலைமை தாங்கி, பிரசார ஆட்டோவை கொடியசைத்து தொடங்கி வைத்து, விழிப்புணர்வு பதாகைகளை வெளியிட்டு பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்களை வழங்கினார். அப்போது இளமையில் கல், சுமப்பதற்காக அல்ல கற்பதற்காக, குழந்தைகளின் வருமானம்! பெற்றோருக்கு அவமானம்!! குழந்தைகளின் உரிமையை பறித்து உழைப்பை சுரண்டி லாபம் ஈட்டும் நபர்கள் குற்றவாளிகளே... குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பி மேதை ஆக்குவீர், வேலைக்கு அனுப்பி பேதை ஆக்காதீர், குழந்தை தொழிலாளர் முறையை ஒழித்திடுவோம், வருங்கால தலைமுறையை காத்திடுவோம், குழந்தைகள் நலனில் அக்கறை கொண்டவர்கள் அழையுங்கள்..1098 என பிரசார ஆட்டோவில் விழிப்புணர்வு வாசகங்கள் ஒலிபரப்பு செய்யப்பட்டது.
3 ஆண்டு சிறை
அப்போது அவர் பேசியதாவது:-
குழந்தை வளரிளம் பருவ தொழிலாளர்கள் தடுப்பு ஒழுங்கு முறை சட்டம் மற்றும் கட்டாய கல்வி பெறும் உரிமை சட்டம் குறித்து ஆட்டோ மூலம் விழிப்புணர்வு பிரசாரம் தொடங்கப்பட்டுள்ளது. குழந்தை தொழிலாளர் வளரிளம் பருவத் தொழிலாளர் (தடுப்பு ஒழுங்குமுறை) சட்டம் 1986-ன் படி, குழந்தை தொழிலாளர்களை பணியில் அமர்த்தினால் 6 மாதங்கள் முதல் 2 ஆண்டுகள் வரை சிறை தண்டனை அல்லது ரூ.25 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரை அபராதம், அல்லது இரண்டுமே விதிக்கப்படலாம்.இரண்டாவது முறை குழந்தை தொழிலாளர்களை பணியில் அமர்த்தினால் 1 ஆண்டு முதல் 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும். பெற்றோரோ அல்லது பாதுகாவலரோ தங்கள் குழந்தையை அபாயகரமான வேலைக்கு அனுமதித்தால் ரூ.10 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அனுசியா, தொழிலாளர் உதவி ஆணையர் ஞானவேல், தாசில்தார் வெங்கடேசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.