திருச்சி
கல்வி அலுவலக உதவியாளருக்கு 3 ஆண்டு சிறை
|கல்வி அலுவலக உதவியாளருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
ரூ.2 ஆயிரம் லஞ்சம்
தஞ்சாவூர் மாவட்டம், பூண்டி பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் இயற்பியல் துறை உதவி பேராசிரியராக பணியாற்றி வந்தவர் சக்திவேல். இவர் பதவி உயர்வு பெற்றதற்கு உரிய 19 மாதங்களுக்கான சம்பள நிலுவைத்தொகையை பெற்றுத்தர கோரி திருச்சி கல்லூரி கல்வி இணை இயக்குனர் அலுவலகத்தில் உதவியாளராக பணியாற்றிய வேணுகோபாலை நாடியுள்ளார்.
அப்போது அவர், சம்பள நிலுவைத்தொகையை பெற்றுத்தர ரூ.2 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார். ஆனால் லஞ்சம் தர விரும்பாத சக்திவேல் திருச்சி லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் கடந்த 2012-ம் ஆண்டு ஜனவரி மாதம் 18-ந் தேதி புகார் அளித்தார். இதையடுத்து மறுநாள் வேணுகோபாலிடம், சக்திவேல் ரூ.2 ஆயிரம் கொடுத்தார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் விரைந்து வந்து வேணுகோபாலை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர்.
3 ஆண்டு சிறை
இதுதொடர்பான வழக்கு விசாரணை திருச்சி ஊழல் தடுப்பு சிறப்பு கோர்ட்டில் நடைபெற்று வந்தது. வழக்கின் விசாரணை முடிவடைந்த நிலையில் நேற்று நீதிபதி கார்த்திகேயன் தீர்ப்பு கூறினார். அதில், சம்பள நிலுவைத்தொகையை பெற்றுத்தர ரூ.2 ஆயிரம் லஞ்சம் வாங்கிய குற்றத்திற்காக வேணுகோபாலுக்கு ஓராண்டு கடுங்காவல் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும், அபராதத்தை கட்ட தவறினால் 6 மாதம் சிறை தண்டனையும், மேலும் அரசு பதவியை தவறாக பயன்படுத்தி லஞ்சம் கேட்டுப்பெற்ற குற்றத்திற்காக 3 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும், அபராதத்தை கட்ட தவறினால் 6 மாதம் சிறை தண்டனையும் விதித்ததோடு, மேற்கண்ட தண்டனைகளை ஏககாலத்தில் அனுபவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். இதனால் வேணுகோபால் அதிகபட்ச தண்டனையாக 3 ஆண்டு சிறையில் அடைக்கப்படுவார்.
தீர்ப்பு கூறப்பட்டதையடுத்து வேணுகோபாலை போலீசார் திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.