பள்ளி வேன் மோதியதில் 3 வயது குழந்தை உயிரிழப்பு - கடலூரில் சோகம்
|கடலூரில் பள்ளி வேன் மோதியதில் 3 வயது குழந்தை பரிதாபமாக உயிரிழந்தான்.
கடலூர்,
கடலூர் அருகே உள்ள மேற்கு ராமாபுரத்தை சேர்ந்தவர் சீனுவாசன். நெடுஞ்சாலை துறை ஊழியர். இவரது மனைவி தீபா. இவர்களுக்கு தேஜஸ்வரன் (வயது 3) என்ற குழந்தை இருந்தது. இன்று காலை கிழக்கு ராமாபுரத்தில் உள்ள அவரது தாத்தா வீட்டில் இருந்த தேஜஸ்வரன், சாலையில் விளையாடிக் கொண்டிருந்தான்.
அப்போது அந்த வழியாக வந்த தனியார் பள்ளி வேன் திடீரென தேஜஸ்வரன் மீது மோதியது. குழந்தையின் தலையில் பள்ளி வேன் சக்கரம் ஏறியதால் சம்பவ இடத்திலேயே தலை நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தான். இதனை பார்த்த உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் கடும் அதிர்ச்சி அடைந்து கதறி அழுது துடித்தனர்.
விபத்து குறித்து கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் அங்கு விரைந்து வந்து குழந்தை தேஜஸ்வரன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பள்ளி வேன் மோதி 3 வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.