சென்னை
ஆவடி அருகே கிருஷ்ணா கால்வாயில் மூழ்கி 3 வயது குழந்தை பலி - பெற்றோர் கண் முன்னே பரிதாபம்
|கிருஷ்ணா கால்வாயில் மூழ்கி 3 வயது குழந்தை பரிதாபமாக இறந்தது. பெற்றோர் கண் எதிரேயே நடந்த இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
ஆவடியை அடுத்த ஆலத்தூர் சைதன்யா நகரை சேர்ந்தவர் அருள்பாண்டி (வயது 28). இவர், சரக்கு வாகனத்தில் பல இடங்களுக்கு சென்று பழைய பேப்பர் உள்ளிட்ட பொருட்களை வாங்கும் தொழில் செய்து வருகிறார். இவருடைய மனைவி கவிதா (26). இவர்களுக்கு ஹரிஷ் (6) மற்றும் பிரனாவ் (3) என 2 மகன்கள்.
இவர்களில் ஹரிஷ், ஆந்திர மாநிலம் அனந்தபூர் அடுத்த இந்துபுரம் பகுதியில் வசிக்கும் பாட்டி அனுராதா வீட்டில் வசிக்கிறான். அருள்பாண்டி, தனது மனைவி மற்றும் 2-வது மகன் பிரனாவ் ஆகியோருடன் ஆலத்தூரில் தனது மைத்துனர் அகீம் வீட்டில் கடந்த 3 மாதங்களாக வசித்து வருகிறார்.
நேற்று முன்தினம் மாலை ஆலத்தூர் பகுதியில் உள்ள கிருஷ்ணா கால்வாயில் அருள்பாண்டி, தனது மனைவி, குழந்தையோடு குளிக்க சென்றார். முதலில் குழந்தை பிரனாவை குளிப்பாட்டி விட்டு கரைமேல் உட்கார வைத்துவிட்டு பின்னர் கணவன்-மனைவி இருவரும் கிருஷ்ணா கால்வாயில் இறங்கி குளித்தனர்.
மனைவிக்கு நீச்சல் தெரியாததால் அருகில் இருந்து அருள்பாண்டி நீச்சல் கற்று கொடுத்துக்கொண்டிருந்தார். அப்போது கரையில் உட்கார்ந்திருந்த குழந்தை பிரனாவ், திடீரென கிருஷ்ணா கால்வாயில் இறங்கியதால் தண்ணீரில் அடித்துச்செல்லப்பட்டான்.
தங்கள் கண் எதிரேயே தண்ணீரில் மகன் அடித்துச்செல்லப்படுவதை கண்டு அதிர்ச்சி அடைந்த அருள்பாண்டி, உடனடியாக கால்வாயில் மூழ்கிய குழந்தையை மீட்டு திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார்.
அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், குழந்தை பிரனாவ் ஏற்கனவே நீரில் மூழ்கி இறந்து விட்டதாக தெரிவித்தனர். அதை கேட்டு அதிர்ச்சி அடைந்த அருள்பாண்டி, கவிதா இருவரும் தங்கள் குழந்தையின் உடலை பார்த்து கதறி அழுதது பார்க்க பரிதாபமாக இருந்தது.
இதுபற்றி முத்தாபுதுப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துராமலிங்கம் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.