< Back
மாநில செய்திகள்
பாம்பு கடித்து 3½ வயது குழந்தை சாவு - சேலத்தில் சோகம்
மாநில செய்திகள்

பாம்பு கடித்து 3½ வயது குழந்தை சாவு - சேலத்தில் சோகம்

தினத்தந்தி
|
11 July 2024 10:22 AM GMT

தந்தை சதீஷ்குமார் குழந்தையை தூக்கிக்கொண்டு மோட்டார் சைக்கிளில் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார்.

சேலம்,

சேலம் மாவட்டம் தம்மம்பட்டி அருகே நாகியம்பட்டியில் மின்சார வாரிய அலுவலகம் உள்ளது, அதன் அருகில் சுந்தரவதனம் என்பவருடைய விவசாய தோட்டத்தில் மண்மலை பாலக்காட்டை சேர்ந்த சதீஷ்குமார் என்பவர் கூலி வேலை செய்து வந்தார். அவர், அந்த தோட்டத்தில் உள்ள வீட்டில் மனைவி மீனா மற்றும் 3½ வயதில் வருண் என்ற ஆண் குழந்தை, 2 வயதில் வர்ஷா என்ற பெண் குழந்தையுடன் தங்கி இருந்தார்.

நேற்று முன்தினம் இரவு 2 குழந்தைகளுடன் கணவன்- மனைவி இருவரும் தூங்கிக் கொண்டிருந்தனர். நள்ளிரவு சுமாா்12 மணி அளவில் திடீரென வருண் கதறி அழுதான். அவனது அழுகுரல் கேட்டு திடுக்கிட்டு விழித்த சதீஷ்குமார், மகன் எதற்காக அழுகிறான் என்று பார்த்தார்.

அப்போது பாம்பு ஒன்று வருணை கடித்தபடி கிடந்துள்ளது. உடனே சதீஷ்குமார் கூச்சல் போடவே பாம்பு அங்கிருந்து சென்று விட்டது. உடனே சதீஷ்குமார் பதறி அடித்துக்கொண்டு குழந்தையை தூக்கிக்கொண்டு மோட்டார் சைக்கிளில் தம்மம்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக ஆத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு குழந்தையை சதீஷ்குமார் தூக்கி சென்றார்.

அப்போது குழந்தை பேச்சு மூச்சு இல்லாமல் இருந்தது. ஆத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் குழந்தையை பரிசோதனை செய்த டாக்டர்கள் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இதைக்கேட்டு சதீஷ்குமாரும், மீனாவும் கதறி அழுத காட்சி அங்கிருந்தவர்களை கண்கலங்க செய்தது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வீட்டில் பெற்றோருடன் தூங்கிய குழந்தை பாம்பு கடித்து பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்