< Back
மாநில செய்திகள்
ரூ.1,000 லஞ்சம் பெற்ற வழக்கில் மின்வாரிய ஊழியருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை
கரூர்
மாநில செய்திகள்

ரூ.1,000 லஞ்சம் பெற்ற வழக்கில் மின்வாரிய ஊழியருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை

தினத்தந்தி
|
25 July 2023 12:36 AM IST

மின் இணைப்பு மீது விரைந்து நடவடிக்கை எடுக்க ரூ.1,000 லஞ்சம் பெற்ற வழக்கில் மின்வாரிய ஊழியருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து கரூர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

மின்இணைப்பு

கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் தாலுகா, லெட்சுமணம்பட்டியை சேர்ந்தவர் முத்துக்கிருஷ்ணன். இவர் தனது பெயரில் உள்ள சுமார் 2.5 ஏக்கர் விவசாய நிலத்திற்கு சுயநிதி முன்னுரிமை திட்டத்தின்கீழ் மின்இணைப்பு பெற கடந்த 2008-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 31-ந்தேதி மாயனூரில் உள்ள தமிழ்நாடு மின்வாரிய உதவி பொறியாளர் அலுவலகத்தில் விண்ணப்பித்திருந்தார்.

அதற்காக முத்துக்கிருஷ்ணன் கடந்த 2010-ம் ஆண்டு மார்ச் மாதம் 25-ந்தேதி அந்த அலுவலகத்தில் வணிக ஆய்வாளராக பணிபுரிந்த பெரியசாமியிடம் ரூ.10 ஆயிரம் முதலீட்டு கட்டணமாக செலுத்தியுள்ளார். அப்போது விண்ணப்பத்தின் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க ரூ.1,000 லஞ்சமாக பெரியசாமி கேட்டுள்ளார். லஞ்சம் கொடுக்க விருப்பமில்லாத முத்துக்கிருஷ்ணன், திருச்சி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவில் புகார் அளித்தார்.

3 ஆண்டுகள் சிறை

ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப்பிரிவு அதிகாரி களின் அறிவுறுத்தலின்பேரில் பெரியசாமியிடம் ரூ.1,000 லஞ்ச பணத்தை முத்துக்கிருஷ்ணன் வழங்கினார். இப்போது ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவினர் பெரியசாமியை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை கரூர் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கில் நீதிபதி ராஜலிங்கம் நேற்று தீர்ப்பு வழங்கினார்.

அந்த தீர்ப்பில் அரசு ஊழியர் லஞ்சம் பெற்றதற்காக 2 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதமும், அபராதத்தொகையை செலுத்த தவறினால் மேலும் 6 மாத சிறை தண்டனை, அரசு பதவியை தவறாக பயன்படுத்தியதற்காக 3 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.10 ஆயிரம் அபராதமும், அபராத தொகையை செலுத்த தவறினால் மேலும் 1 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து, இவற்றை ஏக காலத்தில் அனுபவிக்க உத்தரவிட்டார்.

மேலும் செய்திகள்