நிலக்கரிச் சுரங்க விவகாரத்தில் உடனடியாக வெளியிட வேண்டிய 3 அறிவிப்புகள்: முதல்-அமைச்சருக்கு அன்புமணி ராமதாஸ் கடிதம்
|தமிழ்நாட்டின் எந்த பகுதியிலும் நிலக்கரி சுரங்கம் அமைக்க அனுமதிக்க மாட்டோம் என்று பேரவையில் தமிழக முதல்-அமைச்சர் வாக்குறுதி அளிக்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
சென்னை,
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாட்டின், குறிப்பாக கடலூர் உள்ளிட்ட காவிரி பாசன மாவட்டங்களைச் சேர்ந்த உழவர்களின் வாழ்வாதாரத்தையும், சுற்றுசூழலையும் சீரழிக்கும் பழுப்பு நிலக்கரி சுரங்கத் திட்டங்களைத் தடுத்து நிறுத்துவதற்கு தமிழக முதலமைச்சராகிய தங்களின் உதவியைக் கேட்டு இக்கடிதத்தை எழுதுகிறேன். கடலூர் மாவட்டத்தில் நெய்வேலியை மையமாகக் கொண்டு செயல்பட்டு வரும் என்.எல்.சி நிறுவனத்தால் ஏற்படும் சமூக, வாழ்வாதார, சுற்றுச்சூழல் பாதிப்புகளை எதிர்த்து பாட்டாளி மக்கள் கட்சி தொடங்கப்படுவதற்கு முன்பிலிருந்தே கடந்த 40 ஆண்டுகளாக ராமதாஸ் போராடி வருகிறார்.
பாட்டாளி மக்கள் கட்சி தொடங்கப்பட்ட பிறகு என்.எல்.சிக்கு எதிராக எண்ணற்ற போராட்டங்கள் நடத்தப்பட்டிருக்கின்றன. இது குறித்த வரலாறுகளை தாங்கள் நன்றாக அறிவீர்கள். என்.எல்.சி சுரங்கங்களால் ஏற்படும் பாதிப்புகளையே இந்த பூவுலகினால் தாங்கிக் கொள்ள முடியாது எனும் நிலையில், மேலும், மேலும் சுரங்கங்களை அமைக்கவும், இப்போதுள்ள சுரங்கங்களை விரிவாக்கம் செய்யவும் மத்திய அரசும், என்.எல்.சியும் இணைந்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. மக்களுக்கும், உழவர்களுக்கும் எதிரான இந்தச் செயல்களை எதிர்த்து பா.ம.க. போராடி வருகிறது.
கடலூர் மாவட்டத்தில் இப்போது செயல்பட்டு வரும் என்.எல்.சி சுரங்கங்கள் 1, 1ஏ, 2 ஆகியவற்றின் விரிவாக்கத்திற்காகவும், என்.எல்.சி மூன்றாவது சுரங்கத்திற்காகவும் மொத்தம் 25,000 ஏக்கர் நிலங்களை கையகப்படுத்த என்.எல்.சி நிறுவனம் திட்டமிட்டுள்ளது; சுரங்க விரிவாக்கத்திற்கு தேவையான நிலங்களை அரசு எந்திரம் மற்றும் காவல்துறையை பயன்படுத்தியும், அடக்குமுறையை கட்டவிழ்த்து விட்டும் கையகப்படுத்தும் முயற்சியில் கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர்களும், மாவட்ட ஆட்சியரும் ஈடுபட்டு வருகின்றனர்; அந்த நடவடிக்கைகளை உடனடியாக கைவிட வேண்டும். அடுத்தக்கட்டமாக கடலூர் உள்ளிட்ட காவிரி பாசன மாவட்டங்களில் செயல்படுத்தப்படவுள்ள சேத்தியாத்தோப்புக்கு கிழக்கே நிலக்கரி சுரங்கத் திட்டம், வீராணம் நிலக்கரி சுரங்கத் திட்டம், பாளையம்கோட்டை நிலக்கரி சுரங்கத் திட்டம், மைக்கேல்பட்டி நிலக்கரி சுரங்கத் திட்டம், வடசேரி நிலக்கரி சுரங்கத் திட்டம் ஆகிய திட்டங்களுக்கு தமிழ்நாடு அரசு அனுமதி அளிக்கக் கூடாது என்று வலியுறுத்தி கடலூர் மாவட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சி பொதுமக்களுடன் இணைந்து தொடர்போராட்டங்களை நடத்தி வருகிறது.
பொதுமக்கள் மற்றும் உழவர்களிடம் கருத்துக் கேட்புக் கூட்டம், என்.எல்.சிக்கு பூட்டுப் போடும் போராட்டம், கடலூர் மாவட்டம் முழுவதும் ஒரு நாள் கடையடைப்புப் போராட்டம், கிராமசபைக் கூட்டங்களில் தீர்மானங்கள், அனைத்து உழவர் அமைப்புகள், வணிகர் அமைப்புகள், தொண்டு நிறுவனங்கள் உள்ளிட்ட அமைப்புகளுடனான கலந்தாய்வுக் கூட்டம் ஆகியவற்றை பாட்டாளி மக்கள் கட்சி நடத்தியது. அதன் தொடர்ச்சியாக சட்டப்பேரவையிலும் இது குறித்து பாட்டாளி மக்கள் கட்சி கவன ஈர்ப்பு தீர்மானத்தை கொண்டு வந்து, இந்தத் திட்டங்களைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தியது. சட்டப்பேரவையில் அதற்கு பதிலளித்துப் பேசிய தொழிற்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, அத்தகைய திட்டங்கள் எதுவும் தமிழ்நாட்டிற்கு வராது என்று தெரிவித்தார். ஆனால், அமைச்சரின் கருத்து உண்மையல்ல என்று கூறிய பாட்டாளி மக்கள் கட்சி, புதிய திட்டங்கள் குறித்த ஆதாரங்களை வெளியிட்டது. இதுதொடர்பாக ஏப்ரல் 4-ஆம் நாள் நானும் விரிவான அறிக்கையை வெளியிட்டேன்.
அதற்கு அடுத்த நாள், சட்டப்பேரவையில் இது தொடர்பாக நடைபெற்ற விரிவான விவாதத்தில் குறுக்கிட்டு பேசிய தாங்கள்,'' நானும் டெல்டா மாவட்டத்தைச் சேர்ந்தவன். எந்தக் காரணத்தைக் கொண்டும், காவிரி டெல்டா மாவட்டங்களில் புதிய நிலக்கரித் திட்டங்களுக்கு நிச்சயமாக நம்முடைய தமிழ்நாடு அரசு அனுமதி அளிக்காது; அளிக்காது; அளிக்காது'' என்று உறுதியளித்து இருந்தீர்கள். நிலக்கரி சுரங்கங்கள் குறித்த உங்களின் இந்த நிலைப்பாட்டை பா.ம.க. சார்பில் நான் வரவேற்கிறேன். அதேநேரத்தில் காவிரி பாசன மாவட்டங்களில் மட்டுமின்றி, ஒட்டுமொத்த தமிழ்நாட்டிலும், குறிப்பாக கடலூர் மாவட்டத்தில் எந்தவிதமான புதிய நிலக்கரித் திட்டங்களுக்கும் அனுமதி அளிக்கக்கூடாது என்பதே தமிழ்நாட்டு அரசின் நிலைப்பாடாகவும், கொள்கையாகவும் இருக்க வேண்டும்.
அதற்கு ஆயிரமாயிரம் காரணங்களும், நியாயங்களும் உள்ளன. தமிழ்நாட்டில் மட்டுமின்றி, ஒட்டுமொத்த உலகிலும் நிலக்கரிக்கான தேவை முடிந்து விட்டது. நிலக்கரியை எரிபொருளாகக் கொண்டு மின்சாரம் உற்பத்தி செய்வதிலிருந்து சூரிய ஒளி மற்றும் காற்றாலைகள் மூலம் புதுப்பிக்கவல்ல எரிசக்தியை உற்பத்தி செய்யும் முறைக்கு உலகம் மாறிக் கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த மின்சாரத் தேவையில் 50 விழுக்காட்டை புதுப்பிக்கவல்ல எரிசக்தி மூலம் பெறும் நிலையை 2020-ஆம் ஆண்டுக்குள் எட்டுவோம் என்று தங்கள் தலைமையிலான தமிழ்நாடு அரசு கொள்கைப் பிரகடனம் செய்திருக்கிறது.
அதுமட்டுமின்றி, 2030-ஆம் ஆண்டுக்குள் 15,000 மெகாவாட் நீர்மின்திட்டங்கள் நிறைவேற்றப்படும் என்று 2023-24 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது. 2030-ஆம் ஆண்டுக்குள் 20,000 மெகாவாட் அளவுக்கு சூரிய ஒளி மின்திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. 2040-ஆம் ஆண்டிற்குள் கரிமச் சமநிலை கொண்ட மாநிலமாக தமிழ்நாடு மாற்றப்படும் என்று தாங்களே அறிவித்திருக்கிறீர்கள். அந்த நிலையை எட்ட இப்போதிலிருந்தே நிலக்கரியின் பயன்பாட்டை படிப்படியாக குறைக்கத் தொடங்க வேண்டும்.
ஆனால், இதற்கு முற்றிலும் எதிராக நிலக்கரியின் பயன்பாட்டை அதிகரிக்கும் முயற்சியில் என்.எல்.சி நிறுவனம் ஈடுபட்டு வருகிறது; அதற்காக சுரங்கங்களை விரிவாக்கம் செய்தல், புதிய சுரங்கங்களை அமைத்தல் உள்ளிட்ட என்.எல்.சியின் பணிகளுக்கு கடலூர் மாவட்ட நிர்வாகமும் ஆதரவளித்து வருகிறது என்பது தான் வேதனையான உண்மை. இது நீங்கள் அறிவித்த நிலைக்கு எதிரானதாகும். தமிழ்நாட்டின் இன்றைய ஒட்டுமொத்த மின்தேவை 18,000 மெகாவாட் மட்டுமே. ஆனால், தமிழகத்தின் ஒட்டுமொத்த மின்னுற்பத்தி நிறுவுதிறன் 35,000 மெகாவாட் ஆகும். அதனால், தமிழ்நாடு மின்மிகை மாநிலம் என்ற என்ற நிலையை எட்டிவிட்டது. இத்தகைய நிலையில், இயற்கையை அழித்து, சுற்றுச்சூழலை மாசுபடுத்தி என்.எல்.சி வழங்கும் 800 மெகாவாட் மின்சாரத்திற்காக லட்சக்கணக்கான ஏக்கர் நிலங்களை உழவர்களிடமிருந்து பறித்து என்.எல்.சியிடம் தாரை வார்ப்பதை எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது.
கடலூர் மாவட்டத்தில் கடந்த 66 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் என்.எல்.சி நிறுவனம், அந்த மாவட்டத்தின் அனைத்து வளங்களையும், நலன்களையும் சீரழித்து வருகிறது. கடலூர் மாவட்டத்தில் நிலத்தடி நீர்மட்டம் ஆயிரம் அடிக்கு கீழ் சென்று விட்டது; சுற்றுச்சூழல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது; சுரங்கங்களில் இருந்து வெளியாகும் நச்சு வாயுக்களாலும், நிலக்கரி சாம்பல் பறப்பதாலும் விவசாயமும், மனிதர்களும், கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கின்றனர். என்.எல்.சி சுரங்கங்களால் கடலூர் மாவட்டத்தில் உள்ள 30 லட்சம் மக்களும் ஏதேனும் ஒரு வகையில் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். இதை மறுக்க முடியாது. இத்தகைய சூழலில் புதிய நிலக்கரி சுரங்கங்களை கடலூர் மாவட்டம் உட்பட தமிழ்நாட்டின் எந்த பகுதியிலும் அனுமதிக்க மாட்டோம் என்று சட்டப்பேரவையில் தாங்கள் உறுதியளிக்க வேண்டும்.
கடலூர், அரியலூர், தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் இன்றைய நிலையில்,
1. என்.எல்.சி மூன்றாவது நிலக்கரி சுரங்கத் திட்டம்,
2. சேத்தியாத்தோப்புக்கு கிழக்கே நிலக்கரி சுரங்கத் திட்டம்,
3. வீராணம் நிலக்கரி சுரங்கத் திட்டம்,
4. பாளையம்கோட்டை நிலக்கரி சுரங்கத் திட்டம்,
5. மைக்கேல்பட்டி நிலக்கரி சுரங்கத் திட்டம்,
6. வடசேரி நிலக்கரி சுரங்கத் திட்டம்
ஆகிய 6 புதிய நிலக்கரி சுரங்கத் திட்டங்கள் செயல்படுத்தப்படவுள்ளன. இவற்றில் வீராணம், பாளையம்கோட்டை நிலக்கரித் திட்டங்கள் தவிர மீதமுள்ள 4 திட்டங்கள் குறித்தும் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகிவிட்டன. சேத்தியாத்தோப்பு, மைக்கேல்பட்டி, வடசேரி சுரங்கத் திட்டங்களுக்கு மத்திய அரசு ஏல அறிவிப்பை வெளியிட்டுள்ளது. நெய்வேலி மூன்றாவது நிலக்கரி சுரங்கத் திட்டத்தை செயல்படுத்த அந்த நிறுவத்தின் இயக்குனர்கள் வாரியம் ஒப்புதல் அளித்திருக்கிறது. இத்திட்டங்களை செயல்படுத்த ஒன்றரை லட்சம் ஏக்கர் நிலங்களை கையகப்படுத்த வேண்டியிருக்கும். அவற்றில் 1.40 லட்சம் ஏக்கர் நிலங்கள் காவிரி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்திற்குள் இருப்பவையாகும். மீதமுள்ள 10,000 ஏக்கர் நிலங்களும் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தையொட்டிய காவிரி பாசனப் பகுதியில் தான் அமைந்திருக்கின்றன. அவை அனைத்தும் முப்போகம் நெல் விளையும் நிலங்கள்.
மொத்தமுள்ள 6 புதிய நிலக்கரி சுரங்கத் திட்டங்களில் 4 திட்டங்கள் முழுக்க, முழுக்க கடலூர் மாவட்டத்தில் அமையவுள்ளன. ஏற்கனவே என்.எல்.சி நிலக்கரி சுரங்கங்களால் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகியிருக்கும் கடலூர் மாவட்டத்தில், இந்த புதிய சுரங்கத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டால், அந்த மாவட்டமே பாலைவனமாக மாறுவதை எவராலும் தடுக்க முடியாது. இதைக் கருத்தில் கொண்டு 6 புதிய நிலக்கரி சுரங்கத் திட்டங்களுக்குமே தமிழ்நாடு அரசு அனுமதி அளிக்காது என்று தமிழக சட்டப்பேரவையில் தாங்கள் உறுதிமொழி அளிக்க வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் பழுப்பு நிலக்கரி மின்சாரமா... உணவுப் பாதுகாப்பா? என்றால், கண்டிப்பாக உணவுப் பாதுகாப்புக்குத் தான் தமிழ்நாடு அரசு முன்னுரிமை அளிக்க வேண்டும். காலநிலை மாற்றத்தின் தீயவிளைவுகள் தமிழ்நாட்டிலும் தென்படத் தொடங்கி விட்டன. அடுத்த பத்தாண்டுகளில் தமிழ்நாட்டில் உணவுத் தட்டுப்பாடு (Food Scarcity) ஏற்படும் ஆபத்து உள்ளது. அதைக் கருத்தில் கொண்டு ஒவ்வொரு ஏக்கர் நிலத்தையும் பாதுகாக்க வேண்டும். அதுதான் நமது எதிர்காலத் தலைமுறைக்கு நாம் செய்யும் மிகப்பெரிய சேவை ஆகும். இவற்றைக் கருத்தில் கொண்டு கீழ்க்கண்ட மூன்று அறிவிப்புகளை தமிழ்நாடு சட்டப்பேரவையில் தாங்கள் உடனடியாக வெளியிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
1. என்.எல்.சி மூன்றாவது நிலக்கரி சுரங்கத் திட்டம், சேத்தியாத்தோப்புக்கு கிழக்கே நிலக்கரி சுரங்கத் திட்டம், வீராணம் நிலக்கரி சுரங்கத் திட்டம், பாளையம்கோட்டை நிலக்கரி சுரங்கத் திட்டம், மைக்கேல்பட்டி நிலக்கரி சுரங்கத் திட்டம், வடசேரி நிலக்கரி சுரங்கத் திட்டம் ஆகிய 6 நிலக்கரித் திடங்களுக்கும் தமிழ்நாடு அரசு அனுமதி அளிக்காது.
2. என்.எல்.சி 1, 1ஏ, 2 ஆகிய நிலக்கரி சுரங்கங்களை விரிவாக்கம் செய்வதற்காக உழவர்களுக்கு சொந்தமான நிலங்களை கடலூர் மாவட்ட நிர்வாகம் மூலமாக கையகப்படுத்தி வழங்கும் பணி நிறுத்தப்படும்.
3. என்.எல்.சி சுரங்கங்கள், அனல்மின்நிலையங்கள் ஆகியவற்றால் கடலூர் மாவட்டத்திலும், அதையொட்டிய மாவட்டங்களிலும் ஏற்பட்டிருக்கும் சமூக, சுற்றுச்சூழல், நீர்வள பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்து 3 மாதங்களில் அறிக்கை அளிப்பதற்காக சென்னை ஐ.ஐ.டி வல்லுனர்களைக் கொண்ட குழுவை தமிழ்நாடு அரசு அமைக்கும்.
ஆகிய அறிவிப்புகளை நடப்பு சட்டப்பேரவைக் கூட்டத்தில் தாங்கள் வெளியிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். அதன்மூலம் உங்களை வேளாண் பாதுகாவலராக நிலைநிறுத்துவீர்கள் என்று நம்புகிறேன்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.