பல ஆண்டுகளாக வெளியே வராமல் இருந்த தாய்-மகளின் வீட்டில் 3 டன் குப்பைகள்: கோவையில் பரபரப்பு
|வீடு முழுவதும் குப்பைகள் மற்றும் கழிவுகள் குவிந்து கிடந்து துர்நாற்றம் வீசியது.
கோவை,
கோவை காட்டூர் ராம் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றின் முதல்தளத்தில் 65 வயது மூதாட்டியும், 40 வயதான அவருடைய மகளும் வசித்து வருகிறார்கள். அவர்கள் 2 பேர் மட்டும் கதவை பூட்டிக் கொண்டு பல ஆண்டுகளாக வீட்டை விட்டு வெளியே வராமல் வசித்து வந்ததாக கூறப்படுகிறது.
அவர்கள், தாங்கள் உபயோகிக்கும் பொருட்கள், பழைய துணிகள், காகிதங்கள் மற்றும் கழிவு பொருட்கள் அனைத்தையும் வீட்டிற்குள்ளேயே போட்டு வைத்து வந்தனர். இதனால் அந்த வீடு முழுவதும் குப்பை மற்றும் கழிவுகளாக நிரம்பி கிடந்தது. மேலும் அவர்கள் அதிகம் சமையல் செய்யாமல் ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்து உணவு வாங்கி சாப்பிட்டு உள்ளனர். அதில் மீதமான உணவு மற்றும் பார்சல் பொருட்களையும் வீட்டிற்குள்ளேயே போட்டு வைத்து உள்ளனர். இதனால் படுக்கை அறை, சமையல் அறை, கட்டில் என்று வீடு முழுவதும் குப்பைகள் மற்றும் கழிவுகள் குவிந்து கிடந்து துர்நாற்றம் வீசியது.
ஆன்லைன் ஆர்டரின் பேரில் உணவு கொண்டு வருபவரிடம், உணவை வாங்கியதும் கதவை பூட்டிக் கொண்டு இருந்துள்ளனர். தாய், மகள் வீட்டை விட்டு வெளியே வராமல் குப்பை மற்றும் கழிவுகளுக்கு மத்தியில் வசிப்பது சமீபத்தில் வெளியே தெரிந்தது. இதையறிந்த கோவை மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன், தூய்மை பணியாளர்களை அனுப்பி அந்த வீட்டில் இருந்து குப்பை, கழிவுகளை அகற்ற உத்தரவிட்டார்.
அதன்பேரில் 25 தூய்மை பணியாளர்கள் நேற்று காலை குப்பை லாரியுடன் அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள சம்பந்தப்பட்ட வீட்டுக்கு சென்றனர். அங்கு துர்நாற்றம் வீசியது. அவர்கள் முகக்கவசம் அணிந்தபடி அந்த வீட்டிற்குள் சென்று தேங்கிக் கிடந்த குப்பை மற்றும் கழிவுகளை அகற்ற முயன்றனர். அவர்களிடம் அந்த மூதாட்டி வாக்குவாதம் செய்தார். ஆனால் அதை பொருட்படுத்தாமல் தூய்மை பணியாளர்கள் அந்த வீட்டிற்குள் குவிந்து கிடந்த உணவு கழிவுகள், பழைய துணி, காகிதங்கள் என 3 டன் குப்பை, கழிவுகளை அகற்றி மூட்டை மூட்டையாக கட்டினர். பின்னர் அந்த வீட்டில் கிருமிநாசினி தெளித்தனர்.
வீடு முழுக்க குப்பை கழிவுகள் தேங்கி துர்நாற்றம் வீசிய போதும் அடுக்குமாடியில் மற்ற வீடுகளில் குடியிருப்பவர்கள் ஏன் வெளியில் சொல்லவில்லை என்று மாநகராட்சி அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள். விசாரணையில் மூதாட்டியின் கணவர் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். அதன்பிறகு மன அழுத்தம் காரணமாக அவர்கள் இதுபோன்று நடந்து இருக்கலாம் என தெரிகிறது. மூதாட்டியின் மகள் முதுகலை பட்டதாரி என கூறப்படுகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.