< Back
மாநில செய்திகள்
தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 3 ஆயிரத்து 331 வழக்குகளுக்கு தீர்வு
தூத்துக்குடி
மாநில செய்திகள்

தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 3 ஆயிரத்து 331 வழக்குகளுக்கு தீர்வு

தினத்தந்தி
|
10 Sept 2023 12:15 AM IST

தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று நடந்த தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 3 ஆயிரத்து 331 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.

தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று நடந்த தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 3 ஆயிரத்து 331 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.

தேசிய மக்கள் நீதிமன்றம்

தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் உத்தரவின் அடிப்படையில் தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று மாவட்ட முதன்மை நீதிபதி செல்வம் தலைமையில் தேசிய மக்கள் நீதிமன்றம் நடந்தது.

தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடியில் 5 அமர்வுகளும், கோவில்பட்டியில் 2 அமர்வுகளும், ஸ்ரீவைகுண்டத்தில் 2 அமர்வுகளும், திருச்செந்தூர், விளாத்திகுளம், ஓட்டப்பிடாரம் மற்றும் சாத்தான்குளத்தில் தலா ஒரு அமர்வு என மொத்தம் 13 அமர்வுகளில் தேசிய மக்கள் நீதிமன்றம் நடந்தது.

இதில் சமாதானமாக செல்லக்கூடிய குற்றவியல் வழக்குகள், அனைத்து வகையான சிவில் வழக்குகள், மோட்டார் வாகன விபத்து நஷ்டஈடு வழக்குகள், காசோலை மோசடி வழக்குகள், மணவாழ்க்கை சம்மந்தப்பட்ட வழக்குகள், வங்கி கடன் வழக்குகள் விசாரணைக்கு எடுக்கப்பட்டது. நீதிபதிகள் மற்றும் காப்பீடு நிறுவன மேலாளர்கள், வங்கி மேலாளர்கள், வழக்கறிஞர்கள், நீதிமன்ற ஊழியர்கள், போலீசார், வழக்காடிகள் கலந்து கொண்டனர்.

3,331 வழக்குகளுக்கு தீர்வு

விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்ட வழக்குகளில் ஆயிரத்து 124 வங்கி வாராக்கடன் வழக்குகள் விசாரணைக்கு எடுக்கப்பட்டு 293 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. அதன் மொத்த தீர்வு தொகை ரூ.5 கோடியே 35 லட்சத்து 64 ஆயிரத்து 384 ஆகும். மேலும் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள 3 ஆயிரத்து 951 வழக்குகளில் 3 ஆயிரத்து 38 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. இதன் மொத்த தீர்வுதொகை ரூ.5 கோடியே 74 லட்சத்து 9 ஆயிரத்து ஆகும். மொத்தம் 5 ஆயிரத்து 75 வழக்குகள் விசாரணைக்கு எடுக்கப்பட்டு 3 ஆயிரத்து 331 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. அதன் மொத்த தீர்வு தொகை ரூ.11 கோடியே 9 லட்சத்து 73 ஆயிரத்து 411 ஆகும்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தூத்துக்குடி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயலாளர்-சார்பு நீதிபதி (பொறுப்பு) பிஸ்மிதா, முதுநிலை நிர்வாக உதவியாளர் தாமரை செல்வம், இளநிலை நிர்வாக உதவியாளர் முத்துலட்சுமி ஆகியோர் செய்திருந்தனர்.

மேலும் செய்திகள்