< Back
மாநில செய்திகள்
3 கற்சிலைகள், பீடம் அருங்காட்சியகத்தில் ஒப்படைப்பு
கிருஷ்ணகிரி
மாநில செய்திகள்

3 கற்சிலைகள், பீடம் அருங்காட்சியகத்தில் ஒப்படைப்பு

தினத்தந்தி
|
26 Sept 2023 1:00 AM IST

பேரிகை அருகே கிடைத்த 3 கற்சிலைகளும், பீடமும் அரசு அருங்காட்சியகத்தில் ஒப்படைக்கப்பட்டது.

கிருஷ்ணகிரி:-

பேரிகை அருகே கிடைத்த 3 கற்சிலைகளும், பீடமும் அரசு அருங்காட்சியகத்தில் ஒப்படைக்கப்பட்டது.

கற்சிலைகள்

கிருஷ்ணகிரி மாவட்டம், பேரிகை அருகே உள்ளது அத்திமுகம். இந்த கிராமத்தில், கிருஷ்ணன் என்பவருக்கு சொந்தமான நிலத்தில் வீடு கட்ட பள்ளம் தோண்டிய போது, பழமை வாய்ந்த மூன்று கற்சிலைகள் மற்றும் ஒரு பீடமும் கண்டெடுக்கப்பட்டது.

அதில், பைரவர் சிலை, 2.7 அடி உயரமும், சண்டிகேஸ்வரர் சிலை, 2.4 அடி உயரமும், துர்கை சிலை 3 அடி உயரமும் உள்ளது. இது குறித்து தகவல் அறிந்த சூளகிரி தாசில்தார் சக்திவேல், சிலைகளைப் பார்வையிட்டு தாலுகா அலுவலகத்திற்கு கொண்டு வந்தார். பின்னர் மாவட்ட கலெக்டர் சரயுவின் ஒப்புதலோடு, கிருஷ்ணகிரி மாவட்ட அரசு அருங்காட்சியகத்தில் ஒப்படைத்தார்.

இது குறித்து அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் கோவிந்தராஜ் கூறியதாவது:-

13-ம் நூற்றாண்டை சேர்ந்தவை

இந்த 3 கற்சிற்பங்களும், 13-ம் நூற்றாண்டைச் சேர்ந்தவை. இவற்றில் ஆங்காங்கே லேசான பின்னங்கள் காணப்படுகின்றன என்றாலும் மிகுந்த கலை அழகுடன் உள்ளன. பைரவர் பின்னால் நாய் காட்டப்பட்டுள்ளது. அவரது பின் கைகளில் உடுக்கை மற்றும் பாசக்கயிறு உள்ளன. முன் கைகளில் சூலம் மற்றும் பிச்சைப்பாத்திரம் உள்ளன.

சண்டிகேஸ்வரர் சிற்பம் சுகாசன அமர்வில் உள்ளது. இவர் வலது கையில் கோடரியையும், இடது கையை கடக முத்திரையாகவும் வைத்துள்ளார். துர்க்கை சிற்பம் எருமைத் தலைமீது நேராய் நின்ற வண்ணம் உள்ளது. பின் கைகளில் சக்கரம் மற்றும் சங்கும், முன் கைகளில் வலது கை அபய முத்திரை காட்டியும், இடது கையை தொடைமீதும் வைத்துள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டத்தின் பிற்கால சோழர்களின் கலைக்கு இச்சிற்பங்கள் சிறந்த எடுத்துக்காட்டுகளாகும். இவ்வாறு அவர் கூறினார்.இந்த நிகழ்ச்சியில், வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழுவின் ஒருங்கிணைப்பாளர் தமிழ்ச்செல்வன், அருங்காட்சியக பணியாளர்கள் செல்வகுமார், பெருமாள் ஆகியோர் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்