கரூர்
கரூர்-நொய்யல் பகுதிகளில் 3 பாம்புகள் பிடிபட்டன
|கரூர்-நொய்யல் பகுதிகளில் சுற்றித்திரிந்த 3 பாம்புகள் பிடிபட்டது.
கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட காந்திகிராமம் விளையாட்டு திடல் அருகில் நேற்றுமுன்தினம் இரவு சுமார் 50 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் கடைவீதிக்கு வந்துள்ளார். தனது மோட்டார் சைக்கிளை கடைக்கு முன்பாக நிறுத்திவிட்டு பொருட்கள் வாங்க உள்ளே சென்றுள்ளார். பொருட்கள் வாங்கிவிட்டு வெளியே வந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிளினுள் நல்ல பாம்பு ஒன்று படம் எடுத்து ஆடி உள்ளது. இதைக் கண்ட அவர் அதிர்ச்சி அடைந்தார். பின்னர் இதுகுறித்து கரூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் விரைந்து வந்த தீயணைப்பு படை வீரர்கள் மோட்டார் சைக்கிளின் உள்ளே புகுந்த பாம்பை பிடிக்கும் பணியில் ஈடுபட்டனர். சுமார் அரை மணி நேர போராட்டத்திற்குப் பிறகு பாம்பை உயிருடன் மீட்ட தீயணைப்பு படை வீரர்கள், காட்டுப்பகுதியில் விடுவதற்காக அதனை பத்திரமாக எடுத்துச் சென்றனர்.
இதேபோல் கந்தம்பாளையம் அருகே ஓ.கே.ஆர். தோட்டம் திருநகர் பகுதியை சேர்ந்தவர் செல்வகுமார் (48).இவர் புதிதாக வீடு கட்டிக் கொண்டிருக்கிறார். வீடு கட்டுவதற்காக அப்பகுதியில் தண்ணீர் தொட்டி கட்டி அதில் தண்ணீர் நிரப்பி இருந்தார். நேற்று கட்டிட தொழிலாளிகள் தண்ணீர் தொட்டி அருகே வந்து பார்த்தபோது தொட்டியின் தண்ணீருக்குள் 5 அடி நீளமுள்ள நாக பாம்பு இருந்துள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த வேலாயுதம்பாளையம் தீயணைப்பு நிலைய அலுவலர் கோமதி தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்தனர். பின்னர் தண்ணீர் தொட்டிக்குள் இருந்த நாகபாம்பை பிடித்தனர்.இதேபோல் புகழூர் செந்தூர் நகர் பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன். இவரது வீட்டில் இருந்த பாம்பையும் தீயணைப்பு வீரர்கள் பிடித்தனர். பின்னர் 2 பாம்புகளும் வனப்பகுதியில் விடப்பட்டன.