செங்கல்பட்டு
சிங்கப்பெருமாள் கோவில் அருகே 3 ராக்கெட் லாஞ்சர்கள் கிடந்ததால் பரபரப்பு; உதவி போலீஸ் கமிஷனர் நேரில் விசாரணை
|சிங்கப்பெருமாள் கோவில் அருகே 3 ராக்கெட் லாஞ்சர் கள் கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து உதவி போலீஸ் கமிஷனர் சிங்காரவேலு நேரில் விசாரணை நடத்தினார்.
ராக்கெட் லாஞ்சர்கள்
செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவில் அருகே உள்ள அனுமந்தபுரம் கிராமத்தில் தமிழக அரசின் துப்பாக்கி சுடும் பயிற்சி தளம் உள்ளது. இந்த பயிற்சி தளத்தில் மத்திய, மாநில போலீஸ் படையினர், துணை ராணுவத்தினர், தேசிய பாதுகாப்பு படையினர் உள்பட பல்வேறு பிரிவுகளை சேர்ந்த பாதுகாப்பு வீரர்கள் அடிக்கடி துப்பாக்கி சுடும் பயிற்சி மற்றும் வெடிகுண்டு வீசும் பயிற்சிகளில் ஈடுபடுவது வழக்கம்.
இந்த நிலையில் நேற்று காலை அனுமந்தபுரம் துப்பாக்கி சுடும் பயிற்சி மையம் அருகே உள்ள வனப்பகுதியில் வெடிகுண்டு போல ஒரு மர்ம பொருள் கிடப்பதாக மறைமலைநகர் போலீசாருக்கு அந்த கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர்.
உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த கூடுவாஞ்சேரி போலீஸ் உதவி கமிஷனர் சிங்காரவேலு தலைமையில் மறைமலைநகர், கூடுவாஞ்சேரி போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்தபோது 3 ராக்கெட் லாஞ்சர்கள் என்பது தெரிய வந்தது.
போலீசார் விசாரணை
இதை தொடர்ந்து போலீசார் வனப்பகுதியில் வேறு ஏதாவது ராக்கெட் லாஞ்சர் இருக்கிறதா? யாராவது பதுக்கி வைத்துள்ளார்களா? என்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். ராக்கெட் லாஞ்சர் கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்து போலீசார் உயர் அதிகாரிகளுக்கு இது பற்றிய தகவலை தெரிவித்துள்ளனர். கண்டெடுக்கப்பட்ட ராக்கெட் லாஞ்சரை நிபுணர்கள் ஆய்வு செய்த பிறகே அது வெடித்ததா? வெடிக்காதா? என்பது தெரிய வரும்.
மேலும் சமீபத்தில் இங்கு பயிற்சியில் ஈடுபட்ட வீரர்கள் யாராவது இந்த ராக்கெட் லாஞ்சரை பயன்படுத்தினார்களா? என்பது குறித்து மறைமலைநகர் போலீசார் விசாரித்து வருகின்றனர். இது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.