< Back
மாநில செய்திகள்
வனப்பகுதியில் கண்டெடுக்கப்பட்ட 3 ராக்கெட் லாஞ்சர்கள் பள்ளத்தில் போட்டு பாதுகாப்பாக வைப்பு
செங்கல்பட்டு
மாநில செய்திகள்

வனப்பகுதியில் கண்டெடுக்கப்பட்ட 3 ராக்கெட் லாஞ்சர்கள் பள்ளத்தில் போட்டு பாதுகாப்பாக வைப்பு

தினத்தந்தி
|
31 Oct 2022 12:33 PM IST

வனப்பகுதியில் கண்டெடுக்கப்பட்ட 3 ராக்கெட் லாஞ்சர்கள் பள்ளத்தில் போட்டு சுற்றி மணல் மூட்டைகளை அடுக்கி பாதுகாப்பாக வைத்து உள்ளனர்.

செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவில் அருகே உள்ள அனுமந்தபுரம் கிராமத்தில் துப்பாக்கி சுடும் பயிற்சி தளம் உள்ளது. இங்கு துணை ராணுவத்தினர் உள்பட பல்வேறு படைகளை சேர்ந்த வீரர்கள் பயிற்சி பெறுவது வழக்கம், இந்த பயிற்சி தளம் அருகே உள்ள வனப்பகுதியில் வெடிகுண்டு போல் ஒரு மர்ம பொருள் கிடப்பதாக அந்த பகுதி மக்கள் மறைமலைநகர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் போலீசார் அங்கு சென்று பார்த்தபோது அது ராக்கெட் லாஞ்சர் என்பது தெரியவந்தது. மொத்தம் 3 ராக்கெட் லாஞ்சர்களை மறைமலைநகர் போலீசார் கைப்பற்றி விசாரித்து வருகின்றனர். அந்த ராக்கெட் லாஞ்சர்களை நிபுணர்கள் குழு நேரில் ஆய்வு செய்த பிறகே அது வெடித்ததா? வெடிக்காததா? என்பது தெரிய வரும். எனவே 3 ராக்கெட் லாஞ்சர்ளையும் அதே வனப்பகுதியில் 2½ அடி ஆழத்துக்கு பள்ளம் தோண்டி அதில் வைத்து, பள்ளத்தை சுற்றி மணல் மூட்டைகளை அடுக்கி பாதுகாப்பாக வைத்து உள்ளனர். அதன் அருகில் சிவப்பு நிற கொடிகளையும் கட்டி வைத்துள்ளனர்.

போலீசார் அனுமந்தபுரம் வனப்பகுதியில் முகாமிட்டு தொடர்ந்து வனப்பகுதியில் வேறு எங்காவது ராக்கெட் லாஞ்சர்கள் கிடக்கிறதா? என்று தேடி வருகின்றனர். இந்த 3 ராக்கெட் லாஞ்சர்கள் எந்த படை வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்ட போது பயன்படுத்தினார்கள்? என்பது குறித்தும் பயிற்சி மையத்தில் உயர் போலீஸ் அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்