திண்டுக்கல்
முயல் வேட்டையாடிய 3 பேர் சிக்கினர்
|பழனி அருகே முயல் வேட்டையாடிய 3 பேரை வனத்துறையினர் கைது செய்தனர்.
பழனி அருகே உள்ள சுக்கமநாயக்கன்பட்டி சமத்துவபுரம் பகுதியில் வனவிலங்கு வேட்டை நடப்பதாக பழனி வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதையடுத்து வனச்சரகர் பழனிக்குமார் உத்தரவின்பேரில், வனவர் பிரேம்நாத் ஜெயசீலன் தலைமையிலான வனத்துறையினர் சுக்கமநாயக்கன்பட்டி சமத்துவபுரம் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது சமத்துவபுரம் அருகே உள்ள விளைநிலத்தில் சந்தேகப்படும்படி 3 பேர் நின்று கொண்டிருந்தனர்.
அதைத்தொடர்ந்து வனத்துறையினர் அவர்களை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் அதே பகுதியை சேர்ந்த சரண்ராஜ் (வயது 23), சூர்யா (23), பிரபு (39) என்பதும், வலைகளை பயன்படுத்தி முயல், கவுதாரி வேட்டையாடியதும் தெரியவந்தது. பின்னர் அவர்களிடம் இருந்து ஒரு முயல், கவுதாரி, ஆட்காட்டி பறவை மற்றும் வலைகளை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து மாவட்ட வனஅலுவலர் உத்தரவுப்படி அவர்கள் 3 பேருக்கு தலா ரூ.3 ஆயிரம் வீதம் ரூ.9 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
இதுபற்றி வனச்சரகர் கூறும்போது, வனவிலங்குகள் வேட்டையாடுவது எப்படி குற்றமோ, அதுபோல் வனவிலங்குகளை வளர்ப்பு மற்று உணவுக்காக வாங்குவதும் குற்றம்தான். அவ்வாறு வனவிலங்குகளை வாங்கினால் அவர்களுக்கும் அபராதம் விதிக்கப்படுவதோடு கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.