சென்னை
ரூ.14 கோடியில் 3 கிரவுண்ட் இடம் வாங்கப்பட்டு உள்ளது - தியாகராயநகரில் ரூ.50 கோடியில் புதிய வெங்கடேச பெருமாள் கோவில்
|சென்னையில் உள்ள திருமலை திருப்பதி வெங்கடேசுவர சுவாமி கோவில் இருக்கும் இடத்தில் ரூ.50 கோடியில் முழுவதும் கருங்கற்களால் புதிதாக வெங்கடேச பெருமாள் கோவில் கட்டப்படுகிறது என்று ஏ.ஜெ.சேகர் ரெட்டி கூறினார்.
திருமலை திருப்பதி தேவஸ்தானத்தால் நிர்வகிக்கப்படும் வெங்கடேசுவர பெருமாள் கோவில் கடந்த 48 ஆண்டுகளாக சென்னை தியாகராய நகர், வெங்கட்நாராயணா சாலையில் செயல்பட்டு வருகிறது. திருமலையில் நடப்பது போலவே இக்கோவிலில் பெருமாளுக்கும், பத்மாவதி தாயாருக்கும் தினசரி பூஜைகள் உள்ளிட்ட அனைத்து உற்சவங்களும் நடத்தப்பட்டு வருகிறது.
இடப்பற்றாக்குறை இருந்து வருவதால் அருகில் உள்ள இடங்களை விலைக்கு வாங்கி புதிதாக கோவில் கட்ட முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதற்கான முதல் தொகையாக ரூ.1 கோடிக்கான காசோலையை முன்னாள் எம்.பி.யும் டாக்டர் எம்.ஜி.ஆர். கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவன வேந்தருமான ஏ.சி.சண்முகம், ஏ.ஜெ.சேகர் ரெட்டியிடம் நேற்று வழங்கினார்.
பின்னர் தமிழ்நாடு, புதுச்சேரி திருமலை திருப்பதி தேவஸ்தானம் உள்ளூர் ஆலோசனைக்குழு தலைவர் ஏ.ஜெ.சேகர் ரெட்டி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
புதிய கோவில் கட்டுவதற்காக தற்போது கோவில் அருகில் உள்ள 3 கிரவுண்ட் இடம் ரூ.14 கோடிக்கு வாங்கப்பட்டு உள்ளது. இதுதவிர அருகில் உள்ள மற்ற ஒரு சில இடங்களும் வாங்கப்படுகிறது. இதற்கான தொகையை முன்னாள் எம்.பி.யும் டாக்டர் எம்.ஜி.ஆர். கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவன வேந்தர் ஏ.சி.சண்முகம், டி.வி.எஸ்.குழுமம் கோபால் சீனிவாசன், ஆட்டோ டெக் குரூப் கே.எஸ்.ஜெயராமன், சமீரா அறக்கட்டளை, அனுராகா ரியல் வேல்யூ நிறுவனம், ஆக்செஸ் ஹெல்த் கேர் குரூப் மற்றும் நான் (ஏ.ஜெ.சேகர்ரெட்டி) ஆகியோர் தலா ரூ.1 கோடி நன்கொடையாக வழங்கி உள்ளோம்.
இதுதவிர வேல்ஸ் குழும கல்வி நிறுவனங்கள் ஐசரி கணேஷ் ரூ.50 லட்சம் உள்பட ரூ.7.60 கோடி வசூலிக்கப்பட்டு உள்ளது. பக்தர்கள் கோவில் கட்ட நிதி வழங்குவதாக இருந்தால் கோவில் அலுவலகத்திலும், ஆன்-லைன் மூலமும் வழங்கலாம்.
இடம் தொடர்பான ஆவண நடவடிக்கைகள் ஓரிரு மாதங்களில் முடிக்கப்பட்டு, அடுத்த ஆறு மாதத்திற்குள் சுமார் 11 கிரவுண்ட் நிலப்பரப்பில் கோவில் திருப்பணிகளுக்கான பூமி பூஜை நடத்தப்படும். பின்னர் சுமார் ரூ.40 முதல் ரூ.50 கோடியில் திருமலை திருப்பதி தேவஸ்தானம் தனது சொந்த நிதியில் மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்டது போல் சிமெண்டு பயன்படுத்தாமல், கருங்கற்களால் கோவில் கட்டுகிறது. தரை தளத்தில் கல்யாண மண்டபமும், முதல் தளத்தில் கோவிலும் கட்டப்பட உள்ளது.
இதில் வெங்கடேச பெருமாள் சன்னிதி, ஆஞ்சநேயர் உள்ளிட்ட பல்வேறு சன்னதிகள் 3 ஆண்டுகளில் கட்டப்பட்டு பக்தர்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்படும். திருப்பதி போன்று தினசரி அன்னதானம் மற்றும் பிரசாதங்கள் வழங்கப்படுகிறது.
திருப்பணி நடக்கும் போது பாலாலயம் பூஜைகள் நடத்தப்பட்டு கோவிலின் ஒரு பகுதியில் பெருமாள் எழுந்தருளி தினசரி பூஜைகளும் நடத்தப்படுகிறது. பக்தர்கள் தரிசிக்கவும் ஏற்பாடு செய்யப்படுகிறது.
தியாகராயநகரில் உள்ள ஜி.என்.செட்டி சாலையில் உள்ள தாயார் கோவிலில் மாதம் சுமார் 5 லட்சம் பேர் தரிசனம் செய்கின்றனர். பெருமாள் கோவிலில் இருந்து தாயார் கோவிலுக்கு பக்தர்கள் செல்வதற்காக இலவச பேட்டரி பஸ் வசதி செய்துதரப்பட உள்ளது.
இதேபோன்று ராயப்பேட்டை புதிய கல்லூரி எதிரில் உள்ள ஒன்றரை ஏக்கர் நிலப்பரப்பில் ஏழைகள் பயனடையும் வகையில் கல்யாண மண்டபம் கட்டப்படுகிறது. இதற்கான பூமி பூஜையும் ஓரிரு மாதங்களில் தொடங்கப்படுகிறது.
அதேபோல் மதுரையில் 2 ஏக்கரில் கல்யாண மண்டபம் கட்டப்படுகிறது. வேலூரிலும் புதிதாக கோவில் கட்டப்படுகிறது. உளுந்தூர் பேட்டையில் வருகிற 10-ந்தேதி, ஜம்மு-காஷ்மீரில் 8-ந்தேதி கும்பாபிஷேகம் நடத்தப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
உடன் கமிட்டி உறுப்பினர்கள் அனில்குமார் ரெட்டி, பி.வி.கிருஷ்ணராவ், டாக்டர் காயத்திரி தேவி, கார்த்திகேயன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.