சென்னை
கொரட்டூர் அருகே ஆள்மாறாட்டம் செய்து ரூ.1 கோடி நிலம் மோசடி - பெண் உள்பட 3 பேர் கைது
|கொரட்டூர் அருகே ஆள்மாறாட்டம் செய்து ரூ.1 கோடி மதிப்பிலான நிலத்தை மோசடி செய்த பெண் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
சென்னை அண்ணாநகர் கிழக்கு 1-வது பிளாக் 10-வது தெருவைச் சேர்ந்தவர் கண்ணப்பன் (வயது 70). இவருடைய மனைவி அருணா (63). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இருவரும் அமெரிக்காவில் வசித்து வருகின்றனர். கடந்த 2 ஆண்டுகளாக கணவன்-மனைவி இருவரும் அமெரிக்காவில் உள்ள மகன்கள் வீட்டுக்கு சென்று தங்கி விட்டனர்.
இந்தநிலையில் சென்னை கொரட்டூர் புத்தகரம், லட்சுமி அம்மன் நகரில் உள்ள அருணாவுக்கு சொந்தமான நிலம், ஆள்மாறாட்டம் செய்து லோகநாதன் என்பவருக்கு விற்று மோசடி செய்யப்பட்டதை அறிந்து அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து அருணா ஆவடி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் உள்ள மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் கொடுத்தார். ஆவடி போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் உத்தரவின்பேரில், துணை கமிஷனர் பெருமாள் ஆலோசனைப்படி, கூடுதல் துணை கமிஷனர் முத்துவேல் பாண்டி, உதவி கமிஷனர் பொன்சங்கர் ஆகியோர் மேற்பார்வையில் நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் சென்னை புத்தகரம் மகாத்மா காந்தி நகரை சேர்ந்த ஹரிகோபால் (46) மற்றும் புத்தகரம் லட்சுமி அம்மன் நகரை சேர்ந்த மாரிமுத்து (54) ஆகிய 2 பேரும் சேர்ந்து சென்னை காவாங்கரை மகாவீரர் தோட்டம் பகுதியை சேர்ந்த லலிதா (54) என்ற பெண்ணை அருணா என ஆள் மாறாட்டம் செய்து, அருணா பெயரில் இருந்த நிலத்தை லோகநாதன் என்பவருக்கு விற்பனை செய்திருப்பது தெரியவந்தது.
இதையடுத்து ஆவடி மத்திய குற்றப்பிரிவு போலீசார் லலிதா, ஹரிகோபால், மாரிமுத்து ஆகிய 3 பேரையும் நேற்று கைது செய்தனர். பின்னர் 3 பேரையும் திருவள்ளூர் நில அபகரிப்பு சிறப்பு கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மோசடி செய்யப்பட்ட நிலத்தின் மதிப்பு ரூ.1 கோடி என்று கூறப்படுகிறது.