< Back
மாநில செய்திகள்
திருத்தணி அருகே தந்தை, மகன் உள்பட 3 பேருக்கு அரிவாள் வெட்டு - உறவினர்கள் சாலை மறியல்
திருவள்ளூர்
மாநில செய்திகள்

திருத்தணி அருகே தந்தை, மகன் உள்பட 3 பேருக்கு அரிவாள் வெட்டு - உறவினர்கள் சாலை மறியல்

தினத்தந்தி
|
4 Aug 2022 12:45 PM IST

திருத்தணி அருகே தந்தை, மகன் உள்பட 3 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி ஒன்றியம் பட்டாபிராமபுரம் அருகே வசிப்பவர் கனகராஜ் (வயது 40). ஆட்டோ டிரைவர். நேற்று மாலை மாமண்டூர் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் மது வாங்க கனகராஜ் சென்றார். அப்போது அந்த பகுதியில் காசிநாதபுரம் காலனியை சேர்ந்த தினேஷ் என்பவருக்கும், டாஸ்மாக் கடைக்கு வந்த மற்றொரு நபருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். அப்போது கனகராஜ் தலையிட்டு இருதரப்பினரையும் தடுத்து நிறுத்தியுள்ளார். பின்னர் கனகராஜ் வீட்டுக்கு திரும்பினார்.

தனது விவகாரத்தில் தலையிட்ட கனகராஜ் மீது கோபத்தில் இருந்த தினேஷ் மற்றும் நண்பர்கள் 2 பேர் மோட்டார் சைக்கிளில் பட்டாபிராமபுரம் கிராமத்தில் உள்ள கனகராஜ் வீட்டுக்கு சென்றனர்.

வீட்டில் இருந்த கனகராஜை தினேஷ் மற்றும் அவரது நண்பர்கள் 2 பேர் சேர்ந்து சரமாரியாக அரிவாளால் வெட்டியுள்ளனர். இதில் கனகராஜ் படுகாயம் அடைந்தார். கனகராஜை தாக்குவதை பார்த்த அவருடைய மகன் குணா (14), உறவினர் சரஸ்வதி (27) ஆகியோர் தினேஷ் தரப்பினரை தடுக்க முயன்றனர். அவர்களையும் தினேஷ் தரப்பினர் தலை, கழுத்து உள்ளிட்ட இடங்களில் வெட்டியுள்ளனர். பின்னர் அங்கிருந்து 3 பேரும் தப்பியோடினர். படுகாயம் அடைந்த 3 பேரையும் அருகில் இருந்தவர்கள் மீட்டு திருத்தணி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

குற்றவாளிகளை கைது செய்யக்கோரி உறவினர்கள் அந்த பகுதியில் மறியலில் ஈடுபட்டனர்

இது குறித்து தகவலறிந்து விரைந்து வந்த திருத்தணி துணை போலீஸ் சூப்பிரண்டு விக்னேஷ், இன்ஸ்பெக்டர் ஏழுமலை மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்று தெரிவித்தனர். இதையடுத்து மறியல் கைவிடப்பட்டது.

மேலும் செய்திகள்