செங்கல்பட்டு
திருக்கழுக்குன்றம் பகுதியில் மோட்டார் சைக்கிள்கள் திருடிய 3 பேர் கைது
|திருக்கழுக்குன்றம் பகுதியில் மோட்டார் சைக்கிள்கள் திருடிய 3 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
திருக்கழுக்குன்றம், மாமல்லபுரம், சதுரங்கப்பட்டினம் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து விலையுயர்ந்த மோட்டார் சைக்கிள்கள் திருடப்பட்டு தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் இருந்தன. இந்த நிலையில் செங்கல்பட்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரதீப், மாமல்லபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெகதீஸ்வரன் உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு மோட்டார் சைக்கிள் திருட்டில் ஈடுபடுபவர்களை தேடி வந்த நிலையில் திருக்கழுக்குன்றம் பகுதியில் பல இடங்களில் வாகன தணிக்கையில் ஈடுபட்டுவந்த நிலையில் நேற்று திருக்கழுக்குன்றம் ஆசிரியர் நகர் பகுதியில் திருக்கழுக்குன்றம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன், சப்-இன்ஸ்பெக்டர் திருநாவுக்கரசு தலைமையில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். இந்த நிலையில் அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்த நபர்களை போலீசார் மடக்கி விசாரித்த நிலையில் அவர்கள் முன்னுக்கு பின் முரணாக கூறியதால் சந்தேகம் அடைந்த போலீசார் அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தினர்.
பல இடங்களில் விலை உயர்ந்த மோட்டார் சைக்கிள்களை திருடி வந்தாக போலீசாரிடம் தெரிவித்தனர். அவர்களிடம் இருந்து விலை உயர்ந்த 6 மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்த போலீசார் தொடர்ந்து மோட்டார் சைக்கிள் திருட்டில் ஈடுபட்ட திருக்கழுக்குன்றம் மேட்டுமங்களம் பகுதியை சேர்ந்த சதாம் உசேன் (20), பரமசிவ நகரை சேர்ந்த சரவணன் (38), கருமாரப்பாக்கத்தை சேர்ந்த அப்ருதீன் (20) ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.