சென்னை
மடிப்பாக்கம் பகுதியில் மோட்டார் சைக்கிள் திருடிய 3 பேர் கைது
|மடிப்பாக்கம் பகுதியில் மோட்டார் சைக்கிள் திருடிய 3 பேரை போலீசார் கைது செய்து மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்தனர்.
சென்னையை அடுத்த மடிப்பாக்கம் பகுதியில் வீடுகளின் முன் நிறுத்திவைக்கப்படும் மோட்டார் சைக்கிள்கள் தொடர்ந்து திருட்டு போவதாக மடிப்பாக்கம் போலீசாருக்கு புகார்கள் வந்தன. இதையடுத்து மடிப்பாக்கம் போலீஸ் உதவி கமிஷனர் பிராங்க் டி ரூபன் தலைமையில் மடிப்பாக்கம் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் சீனிவாசன், சப்-இன்ஸ்பெக்டர்கள் ஜெயக்குமார், மணிமாறன் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.
இந்த தனிப்படையினர் விசாரணை நடத்தி, பல்லாவரத்தை சேர்ந்த ராஜபாண்டியன் (வயது 28), அனகாபுத்தூரைச் சேர்ந்த பசாலுதீன் (26), சாம்சன் (24) ஆகிய 3 பேரை கைது செய்தனர். இவர்களிடம் நடத்திய விசாரணையில், இவர்கள் 3 பேரும் மடிப்பாக்கம் பகுதியில் வீடுகளின் முன் நிறுத்தி வைக்கப்படும் விலை உயர்ந்த மோட்டார் சைக்கிள்களை திருடி, அதன் பாகங்களை பழைய மோட்டார் சைக்கிள்களில் மாற்றி கோவை, கன்னியாகுமரி, திருச்சி போன்ற பகுதிகளில் விற்றது தெரியவந்தது. இவர்களிடம் இருந்து விலை உயர்ந்த 7 மோட்டார் சைக்கிள்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.