செங்கல்பட்டு
திருக்கழுக்குன்றம் அருகே துணை தாசில்தாரை தாக்கிய 3 பேர் கைது
|திருக்கழுக்குன்றம் அருகே துணை தாசில்தாரை தாக்கிய 3 பேரை போலீசார் கைது செய்யப்பட்டனர்.
தகராறு
செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் அடுத்த மேட்டு ஈகை பகுதியை சேர்ந்தவர் கார்த்திக் ரகுநாத் (வயது 37). இவர் திருப்போரூர் துணை தாசில்தாராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் கார்த்திக் ரகுநாத் காரில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். காரை திருக்கழுக்குன்றம் பட்டிக்காடு கிராமத்தை சேர்ந்த முரளி ஓட்டிச் சென்றார்.
கொத்திமங்கலம் பைபாஸ் சாலையில் காரை நிறுத்திய டிரைவர் முரளி கார் கதவை வேகமாக திறந்ததாகவும் அப்போது ஒரே மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் மீது கார் கதவு உரசியதாகவும் தெரிகிறது. இதையடுத்து கார் டிரைவர் முரளிக்கும் மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
3 பேர் கைது
இந்த நிலையில் 3 பேரும் சேர்ந்து டிரைவர் முரளி மற்றும் துணை தாசில்தார் கார்த்திக் ரகுநாத்தை தாக்கி உள்ளனர். லேசான காயம் அடைந்த நிலையில் டிரைவர் முரளி படுகாயம் அடைந்து செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இது குறித்து திருக்கழுக்குன்றம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.
விசாரணையில் துணை தாசில்தார் மற்றும் டிரைவரை தாக்கியவர்கள் திருக்கழுக்குன்றம் பரமசிவன் நகரை சேர்ந்த மணிகண்டன் (33), முருகன் (34) மற்றும் மற்றொரு மணிகண்டன் (32) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர்களை கைது செய்தனர்.