அரியலூர்
நாட்டுத்துப்பாக்கியுடன் நடமாடிய 3 பேரை மின்கம்பத்தில் கட்டி வைத்து சரமாரி தாக்குதல்
|ஜெயங்கொண்டம் அருகே நாட்டுத்துப்பாக்கியுடன் நடமாடிய 3 பேரை பிடித்து மின்கம்பத்தில் கட்டி வைத்து அடித்த கிராம மக்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நாட்டுத்துப்பாக்கியுடன் நடமாட்டம்
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே பூவாயிக்குளம் கிராமத்தில் நேற்று அதிகாலை 4 மணியளவில் 3 பேர் நாட்டுத்துப்பாக்கியுடன் சுற்றித்திரிந்தனர். இதனை கண்டு பீதியடைந்த கிராம மக்கள் அவர்கள் 3 பேரையும் மடக்கி பிடித்து அங்குள்ள மின்கம்பத்தில் கட்டிவைத்தனர். ேமலும் இவர்கள் தங்கள் கிராமத்தில் திருட வந்தவர்கள் என நினைத்து சரமாரியாக அடித்து உதைத்தனர். பின்னர் ஜெயங்கொண்டம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, சப்-இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அவர்கள் 3 பேரையும் மீட்டு ஜெயங்கொண்டம் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.
கைது
இதில் அவர்கள் ஜெயங்கொண்டம் மகிமைபுரம் நரிக்குறவர் குடியிருப்பில் வசிக்கும் ஜேபி மகன் சிவா (வயது 20), நைனார் குப்பன் மகன் ராமன் (37), செம்பியன் மகன் புகழேந்தி (25) என்பது தெரியவந்தது. ேமலும் இவர்கள் உரிமம் இல்லாத நாட்டுத்துப்பாக்கியுடன் வவ்வால் வேட்டைக்கு சென்றது தெரியவந்தது. கிராம மக்கள் தாக்கியதில் படுகாயம் அடைந்த ராமனை ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் போலீசார் அனுமதித்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். இதையடுத்து சிவா, புகழேந்தி ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
போலீஸ் நிலையம் முற்றுகை
இதற்கிடையே நரிக்குறவர்கள் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக 2 பேரை போலீசார் விசாரணைக்காக அழைத்து சென்றனர். இதனால் ஆத்திரம் அடைந்த கிராம மக்கள் ஜெயங்கொண்டம் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர். இதையடுத்து, போலீஸ் துணை சூப்பிரண்டு ரவிச்சந்திரன் தலைமையிலான போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி அவர்கள் 2 பேரையும் விடுவித்தனர். பின்னர் நரிக்குறவர்களை தாக்கிய பூவாயிக்குளம் கிராமத்தை சேர்ந்த செல்வம் என்பவரது மகன் மோகன்ராஜ் (26), பால்ராஜ் மகன் பாஸ்கர் (26) ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் ஜெயங்கொண்டம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.