திருப்பத்தூர்
சாராயம், மதுவிற்ற 3 பேர் கைது
|ஜோலார்பேட்டை பகுதியில் சாராயம், மதுவிற்ற 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
ஜோலார்பேட்டை போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பல்வேறு இடங்களில் இன்ஸ்பெக்டர் மங்கையர்கரசி தலைமையிலான போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சின்னமூக்கனூர் அருகே உள்ள சாமியார் கொட்டை பகுதியில் கர்நாடக மாநில மதுபாட்டில்கள் மற்றும் சாராயம் விற்றுக் கொண்டிருந்த ராஜா என்பவரின் மகன் பாக்கியராஜ் (வயது 35) என்பவரை போலீசார் கைது செய்து, அவர் விற்பனைக்கு வைத்திருந்த 30 மது பாட்டில்கள், 5 லிட்டர் சாராயம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
அதேபோன்று அச்சமங்கலம் கீழ்தெரு பகுதியில் சாராயம் மற்றும் மது பாட்டில்கள் விற்பனை செய்த ரவி (55) என்பவரை கைது செய்து, அவரிடம் இருந்து 40 மது பாட்டில்களையும், 5 லிட்டர் சாராயத்தையும் பறிமுதல் செய்தனர். மேலும் பழைய ஜோலார்பேட்டை, கடைத்தெரு பகுதியில் மது பாட்டில், சாராயம் விற்பனை செய்த திலீப் குமார் (39) என்பவரை கைது செய்து, 58 லிட்டர் சாராயம், 30 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.