< Back
மாநில செய்திகள்
கணவன் உள்பட 3 பேருக்கு தலா 10 ஆண்டு சிறை தண்டனை
திருவண்ணாமலை
மாநில செய்திகள்

கணவன் உள்பட 3 பேருக்கு தலா 10 ஆண்டு சிறை தண்டனை

தினத்தந்தி
|
13 Sept 2022 12:15 AM IST

வரதட்சணை கொடுமையால் பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் கணவன், மாமனார், மாமியார் ஆகிய 3 பேருக்கு தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திருவண்ணாமலை மகிளா கோர்ட்டு தீர்ப்பளித்தது.

வரதட்சணை கொடுமையால் பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் கணவன், மாமனார், மாமியார் ஆகிய 3 பேருக்கு தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திருவண்ணாமலை மகிளா கோர்ட்டு தீர்ப்பளித்தது.

வரதட்சணை கொடுமை

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் எலந்தம்புரை கொல்லைகொட்டாய் பகுதியை சேர்ந்தவர் காசிநாதன் (வயது 63). இவரது மனைவி பட்டு (59). இவர்களது மகன் பச்சையப்பன் (35). இவருக்கும் ராதா என்பவருக்கும் கடந்த 2007-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 20-ந் தேதி திருமணம் நடைபெற்றது.

இவர்களுக்கு ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர். பச்சையப்பன், ராதாவிடம் வரதட்சணை கேட்டு கொடுமை செய்துள்ளார்.

இதுகுறித்து 2 முறை திருவண்ணாமலை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டு கணவன் - மனைவிக்கு இடையே சமாதானம் செய்து வைக்கப்பட்டது.

இதையடுத்து கடந்த 2014-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் மீண்டும் வரதட்சணை கேட்டு பச்சையப்பன், ராதாவிடம் தகராறு செய்துள்ளார். அப்போது அவர் ராதாவை அடித்து துன்புறுத்தியதால், ராதா அவரது தாய் வீட்டிற்கு சென்று விட்டார்.

பின்னர் ராதாவை அவரது பெற்றோர் சமாதானம் செய்து கணவர் வீட்டிற்கு அழைத்து வந்து வரதட்சணையாக கேட்ட பணத்தை எப்படியாவது கொடுத்து விடுவதாக தெரிவித்து அவரை விட்டு சென்றனர்.

தற்கொலை

ராதாவின் பெற்றோர் வீடு திரும்புவதற்குள், கணவர் வீட்டில் ராதா தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார் என்று அவர்களுக்கு தகவல் கிடைத்தது. திருமணமாகி 6½ வருடத்திலேயே வரதட்சணை கொடுமையால் ராதா தற்கொலை செய்து கொண்டது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுகுறித்து ராதாவின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் கீழ்பென்னாத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து பச்சையப்பன், காசிநாதன், பட்டு ஆகியோரை கைது செய்தனர்.

தலா 10 ஆண்டுகள் சிறை

இந்த வழக்கு விசாரணை திருவண்ணாமலை மகிளா கோர்ட்டில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் வக்கீல் வீணாதேவி ஆஜரானார்.

வழக்கை விசாரித்த நீதிபதி பார்த்தசாரதி வரதட்சணை கொடுமை செய்து தற்கொலைக்கு தூண்டிய அவரது கணவர் பச்சையப்பன், மாமனார் காசிநாதன், மாமியார் பட்டு ஆகியோருக்கு தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.

இதையடுத்து அவர்கள் 3 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

மேலும் செய்திகள்