< Back
மாநில செய்திகள்
சிறுமியை பலாத்காரம் செய்த சித்தப்பா உள்பட 3 பேர் போக்சோவில் கைது
கரூர்
மாநில செய்திகள்

சிறுமியை பலாத்காரம் செய்த சித்தப்பா உள்பட 3 பேர் போக்சோவில் கைது

தினத்தந்தி
|
21 Dec 2022 12:23 AM IST

கரூரில் சிறுமியை பலாத்காரம் செய்த சித்தப்பா உள்பட 3 பேரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிறுமி பலாத்காரம்

கரூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலராக இருப்பவர் சதீஷ்குமார். இவர் சைல்ட் ஹெல்ப்லைன் பணியாளர்களுடன் பள்ளி செல்லா குழந்தைகளை மீட்கும் திட்டத்தின் கீழ் கரூர் மாவட்ட பகுதியில் பள்ளிக்கு செல்லாமல் குழந்தைகள் யாரேனும் இருக்கிறார்களா? என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வந்துள்ளார்.

அப்போது 10-ம் வகுப்பு தேர்வு எழுதி தேர்வில் தோல்வியடைந்த 16 வயதான சிறுமி ஒருவரை கண்டறிந்து, அச்சிறுமியை காப்பகம் ஒன்றில் சேர்த்து விசாரித்துள்ளனர். விசாரணையில், அச்சிறுமி தேர்வில் தோல்வியடைந்த பின்னர் அவரது உறவினர் ஒருவர் வீட்டில் தங்கி அப்பகுதியில் ஆடு, மாடுகள் மேய்த்துள்ளார். இந்த நிலையில் சம்பவத்தன்று முதியவர் ஒருவர் அந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதையறிந்த அச்சிறுமியின் சித்தப்பா அந்த முதியவரை கண்டித்துள்ளார்.

3 பேர் கைது

அச்சம்பவம் நடந்து சில நாட்களுக்குப் பின்னர் அச்சிறுமியை அவரின் சித்தப்பாவே பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். மேலும் இளைஞர் ஒருவர் அச்சிறுமியை காதலித்து வந்ததுடன், திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி அச்சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததோடு, இது தொடர்பாக யாரிடமும் தெரிவித்தால் கொலை செய்து விடுவதாக மிரட்டியுள்ளார் என்பது தெரியவந்தது. இதையடுத்து சிறுமியை 3 பேர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளது தொடர்பாக மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சதீஷ்குமார், குளித்தலை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இதனை தொடர்ந்து போக்சோ உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த கடவூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட செங்குளம் பகுதியைச் சேர்ந்த பெரியசாமி (வயது 60), சிறுமியின் சித்தப்பா இடும்பன் (31) மற்றும் சஞ்சீவ் (20) ஆகிய 3 பேரையும் அனைத்து மகளிர் போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 3 பேரும் கரூர் மகிளா நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். வேலியே பயிரை மேய்ந்தது போல நடந்துள்ள இச்சம்பவம் இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்