< Back
மாநில செய்திகள்
8 மாத கைக்குழந்தை உள்பட 3 பேர் கழுத்தறுத்து கொலை - கள்ளக்குறிச்சியில் பயங்கரம்
மாநில செய்திகள்

8 மாத கைக்குழந்தை உள்பட 3 பேர் கழுத்தறுத்து கொலை - கள்ளக்குறிச்சியில் பயங்கரம்

தினத்தந்தி
|
20 April 2023 2:48 AM IST

கள்ளக்குறிச்சியில் 2 குழந்தைகள், தாயை கழுத்தை அறுத்து கொலை செய்த மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

கள்ளக்குறிச்சி,

கள்ளக்குறிச்சி ஏமப்பேர் நரிமேடு காட்டுக்கொட்டாய் பகுதியில் வசித்து வந்தவர் மணிகண்டன். இவர் மினி லாரியில் ஊர், ஊராக சென்று காய்கறி வியாபாரம் செய்து வந்தார். இவருடைய மனைவி வளர்மதி (வயது 37). இவர்களுக்கு தமிழரசன் (11) என்ற மகனும், கேசவன் என்ற 8 மாத ஆண் குழந்தையும் இருந்தது. கேசவன் பிறப்பதற்கு முன்பு, அதாவது வளர்மதி கர்ப்பமாக இருந்தபோதே, மணிகண்டன் சாலை விபத்தில் இறந்து விட்டார்.

அதன்பிறகு குழந்தை பெற்ற வளர்மதி, தனது 2 ஆண் குழந்தைகளையும் வளர்த்து வந்தார். வருமானத்திற்காக தன்னுடைய கணவர் விட்டு சென்ற வியாபாரத்தை அவர் செய்ய ஆரம்பித்தார். அவரும் மினி லாரிக்கு டிரைவர் போட்டு, ஊர், ஊராக காய்கறி வியாபாரம் செய்து வந்தார். தமிழரசன் அங்குள்ள அரசு பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்தான்.

துர்நாற்றம்


வியாபாரத்துக்காக காலையில் வெளியே செல்லும் அவர், எப்போது வீட்டுக்கு வருவார் என்று அக்கம் பக்கத்து வீட்டை சேர்ந்தவர்களுக்கு கூட தெரியாதாம். இந்நிலையில், நேற்று வளர்மதி வீட்டில் இருந்து யாரும் வெளியே நடமாடவில்லை. அவரது வீட்டில் இருந்து மாலையில் துர்நாற்றம் வீசியது. இதனால் சந்தேகமடைந்த அக்கம், பக்கத்தினர் இதுபற்றி கள்ளக்குறிச்சி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதற்கிடையில், தகவல் அறிந்ததும் கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜ், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஜவகர்லால், துணை போலீஸ் சூப்பிரண்டு ரமேஷ், போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அப்போது சிமெண்டு ஷீட்டால் கட்டப்பட்ட அவரது வீட்டின் கதவு வெளிப்புறமாக தாழ்ப்பாள் போடப்பட்டு இருந்தது.

ரத்த வெள்ளத்தில் 3 பேர் பிணம்

இதையடுத்து கதவை திறந்த போலீசார் உள்ளே சென்று பார்த்தனர். அங்கே வளர்மதி, அவரது மகன் தமிழரசன், 8 மாத கைக்குழந்தை கேசவன் ஆகிய 3 பேரும் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில், ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தனர். அவர்களது உடல்கள் அழுகிய நிலையில் இருந்தது. 2 நாட்களுக்கு முன்பு அவர்களை கொலையாளிகள் வெட்டிக்கொலை செய்திருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து இறந்த கிடந்த 3 பேரின் உடல்களையும் போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதற்கிடையில் வீட்டை சுற்றி பார்த்த போது, அங்கே வளர்மதி வளர்த்த கன்றுக்குட்டி கத்தியால் குத்தப்பட்டு இறந்து கிடந்தது. 10 கோழிக்குஞ்சுகள் வாளி தண்ணீருக்குள் மூழ்கடித்து சாகடிக்கப்பட்டு கிடந்தது. நாய் கட்டப்பட்டும், பசு மாடு உயிருடனும் இருந்தது. தொடர்ந்து போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தினர். ஆனால், இந்த கொலைக்கான காரணம் குறித்து தகவல் எதுவும் தெரியவில்லை.

மிளகாய் பொடியை தூவிய கொலையாளிகள்

இருப்பினும் கொலையாளிகள் போலீசார் தங்களை பிடித்து விடக்கூடாது என்பதற்காக இறந்த 3 பேர் உடல்களிலும் மிளகாய் பொடியை தூவி விட்டு சென்றுள்ளனர். அதற்கு அடையாளமாக அவர்களது உடல்களிலும், வீட்டிலும் ஆங்காங்கே மிளகாய் பொடிகள் சிதறி கிடந்தன. தொடர்ந்து கைரேகை நிபுணர்கள், தடய அறிவியல் சோதனை நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு வந்து, முக்கிய தடயங்களை சேகரித்தனர். மேலும் மோப்ப நாய் ராக்கி சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்து. அந்த நாய் வீட்டை சுற்றி, சுற்றி வந்தது. ஆனால் யாரையும் கவ்வி பிடிக்க வில்லை.

தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, 2 குழந்தைகளோடு தாயை கொலை செய்தது யார்?, இந்த கொலைக்கான காரணம் என்ன? என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். ஒரே வீட்டில் 2 குழந்தைகளும், தாயும் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

விருத்தாசலம்

கொலை செய்யப்பட்ட வளர்மதி, மணிகண்டனோடு கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே பாலக்கொல்லையில் இருந்து பிழைப்புக்காக கள்ளக்குறிச்சி ஏமப்பேர் நரிமேட்டில் வீட்டுமனை வாங்கி, அதில் வீடு கட்டி குடியிருந்தது தெரிய வந்தது. இந்த வீட்டு மனை தொடர்பாக அப்பகுதியை சேர்ந்த ஒருவருடன் வளர்மதிக்கு பிரச்சினை இருந்து வந்ததாகவும் தெரிகிறது. மேலும் வளர்மதியுடன் சேர்ந்து வியாபாரம் செய்த டிரைவரும் , கடந்த 3 நாட்களாக வரவில்லை என்று தெரிகிறது. இதனால் அவர்களையும் போலீசார் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வருகின்றனர்.

மேலும் செய்திகள்