கன்னியாகுமரி
நகைகளை கொள்ளையடித்த இளம்பெண் உள்பட 3 பேர் கைது
|நாகர்கோவிலில் டிரைவர் வீட்டிற்குள் அதிரடியாக புகுந்து பொம்மைதுப்பாக்கியை காட்டி நகையை கொள்ளையடித்த இளம்பெண் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் 4 பேரை பிடிக்க 3 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
நாகர்கோவில்,
நாகர்கோவிலில் டிரைவர் வீட்டிற்குள் அதிரடியாக புகுந்து பொம்மைதுப்பாக்கியை காட்டி நகையை கொள்ளையடித்த இளம்பெண் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் 4 பேரை பிடிக்க 3 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
காரில் வந்த கும்பல்
நாகர்கோவில் வேதநகர் மேலப்புது தெருவை சேர்ந்தவர் முகமது உமர் சாகிப் (வயது 53), வெளிநாட்டில் டிரைவராக வேலை பார்த்து வந்தார். கடந்த ஆண்டு ஊருக்கு வந்த அவர் வேலைக்கு செல்லவில்லை.
இவருக்கு ஜாஸ்மின் என்ற மனைவியும், ஒரு மகளும் உள்ளனர். நேற்றுமுன்தினம் மாலையில் முகமது உமர் சாகிப்பின் மனைவி, மகள் மற்றும் அவரது மாமியார் ஆகியோர் அருகில் உள்ள ஒரு ஆஸ்பத்திரிக்கு சென்றனர். இதனால் வீட்டில் முகமது உமர் சாகிப் மட்டும் தனியாக இருந்தார்.
இந்தநிலையில் இரவு 8.30 மணிக்கு அவரது வீட்டுக்கு காரில் வந்த கும்பல் வீட்டின் கதவை தட்டினர். உடனே கதவை முகமது உமர் சாகிப் திறந்தார். அப்போது அந்த கும்பல் உங்களுடைய மனைவி எங்களுக்கு தூரத்து சொந்தம், நாங்கள் புது வீடு கட்டி இருக்கிறோம், அந்த நிகழ்ச்சிக்கு நீங்கள் குடும்பத்துடன் வர வேண்டும் என கூறினர். கும்பலின் பேச்சை நம்பிய அவர் உள்ளே வாருங்கள் என வீட்டிற்குள் அழைத்துச் சென்றார்.
துப்பாக்கி முனையில் கொள்ளை
அந்த சமயத்தில் திடீரென கும்பல் துப்பாக்கி முனையிலும், அரிவாளை காட்டியும் முகமது உமர் சாகிப்பை மிரட்டினர். இதனை சற்றும் எதிர்பார்க்காத அவர் அதிர்ச்சி அடைந்தார்.
பின்னர் பணம், நகை எங்கே உள்ளது என அவர்கள் மிரட்டினர். மேலும் அவர் தப்பி செல்லாமல் இருக்க கைகளை கட்டியும், சத்தம் போடாமல் இருக்க வாயில் பிளாஸ்திரியையும் ஒட்டியுள்ளனர். பின்னர் வீடு முழுவதும் அந்த கும்பல் நகை மற்றும் பணத்தை ஒவ்வொரு அறையாக சென்று தேடினர். அப்போது ஒரு அறையில் இருந்த பீரோவில் இருந்து 20 பவுன் நகையை கொள்ளையடித்து விட்டு தப்ப முயன்றனர்.
குடும்பத்தினர் வந்ததால் அதிர்ச்சி
அப்போது கும்பலை சேர்ந்தவர்கள் பர்தாவை போட்டுக்கொண்டு வெளியே செல்ல முயன்றனர். இந்தநிலையில் ஆஸ்பத்திரிக்கு சென்ற ஜாஸ்மின் உள்பட 3 பேரும் வீட்டுக்கு வந்து கதவை தட்டினர்.
இதனால் வீட்டுக்குள் இருந்த கும்பல் எப்படி வெளியே செல்வது? என திகைத்தனர். ஒரு கட்டத்தில் நைசாக பேச்சு கொடுத்தபடி அவர்களின் கவனத்தை திசை திருப்பி தப்பிச் சென்று விடலாம் என நினைத்த கும்பலில் 2 பேர் மட்டும் கதவை திறந்தனர். மற்றவர்கள் வீட்டுக்குள் பதுங்கியிருந்தனர்.
கதவை திறந்து வெளியே வந்த 2 பேரும் பர்தா அணிந்திருந்தனர். என்னுடைய வீட்டுக்குள் இருந்து வெளியே வருகிறீர்களே, நீங்கள் யார்? என சந்தேக பார்வையுடன் ஜாஸ்மின் அவர்களிடம் கேட்டார். அதற்கு, நாங்கள் உங்களது உறவுக்காரர்கள் என ஒருவர் பெண் குரலில் பதிலளித்தார்.
கார் பழுதானதால் சிக்கிய ஆசாமி
அதில் திருப்தி அடையாத ஜாஸ்மின் மற்றும் அவரது மகள், தாய் ஆகியோர் வீட்டுக்குள் நுழைந்தனர். பின்னர் ஜாஸ்மின் மாடிக்கு சென்று பார்த்தபோது அங்கு முகமது உமர் சாகிப்பின் கைகள் கட்டப்பட்ட நிலையில் மயங்கி கிடந்தார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் சத்தம் போட்டார்.
உடனே வீட்டுக்குள் மறைந்திருந்த கும்பல் பர்தா அணிந்தபடி ஒவ்வொருவராக வெளியே ஓடினர். அப்போது தடுக்க முயன்ற ஜாஸ்மினின் தாய் மற்றும் மகளை அந்த கும்பல் தள்ளி விட்டு சென்றனர். பின்னர் அவர்கள் வெளியே நிறுத்தியிருந்த காரில் ஏறி தப்பிச் செல்ல முயன்றனர்.
அவர்களது கெட்ட நேரம் காரில் கோளாறு ஏற்பட்டு காரை இயக்க முடியவில்லை. இதற்கிடையே ஜாஸ்மின் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு திரண்டனர். காரில் தப்ப முயன்ற 7 பேரையும் பொதுமக்கள் பிடிக்க முயன்றனர். ஆனால் அவர்களில் ஒருவர் மட்டும் சிக்கினார். மற்றவர்கள் தப்பி ஓடிவிட்டனர்.
மேலும் 2 பேர் பிடிபட்டனர்
இதற்கிடையே இதுபற்றி தகவல் அறிந்த நாகர்கோவில் துணை போலீஸ் சூப்பிரண்டு நவீன்குமார் மற்றும் கோட்டார் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பொதுமக்களிடம் சிக்கிய ஆசாமியை மீட்டனர்.
பின்னர் கொள்ளை நடந்த வீட்டில் போலீசார் சோதனை செய்தனர். அப்போது கொள்ளை கும்பல் விட்டு சென்ற துப்பாக்கி, அரிவாள் மற்றும் 2 பர்தா ஆகியவை வீட்டில் கிடந்தது. உடனே அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இதற்கிடையே கொள்ளை நடந்த வீட்டின் அருகே தப்பி ஓடியவர்கள் பதுங்கியிருக்கிறார்களா? என போலீசார் தீவிர சோதனை நடத்தினர். அப்போது 2 நபர்கள் பர்தாவுடன் நின்று கொண்டிருந்தனர். போலீசாரை கண்டதும் தப்பி ஓட முயன்றனர். உடனே போலீசார் சுதாரித்துக் கொண்டு இருவரையும் மடக்கி பிடித்தனர். பிடிபட்ட 2 பேரில் ஒருவர் பெண் ஆவார்.
3 தனிப்படை அமைப்பு
பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில், பொதுமக்களிடம் பிடிபட்டவர் நாகர்கோவில் இடலாக்குடி பரசுராம் தெருவை சேர்ந்த ரகீம் (33), போலீசாரிடம் சிக்கியவர்கள் அழகியபாண்டியபுரம் எட்டாமடையை சேர்ந்த கவுரி (36), இடலாக்குடி வயல் தெருவை சேர்ந்த அமீர் என்பதும் தெரியவந்தது. மேலும் தப்பி ஓடியவர்கள் கோட்டார் மேலசரக்கல்விளை மீரான் (40), கோவில்பட்டியை சேர்ந்த சாா்லஸ், நாகர்கோவில் இருளப்பபுரத்தை சேர்ந்த ஷேக் முகமது (35), மைதீன் புகாரி ஆகியோர் என்பதும் தெரியவந்துள்ளது. மேலும் பிடிபட்டவர்களிடம் இருந்து 10 பவுன் நகை மீட்கப்பட்டுள்ளது. மீதி நகையை தப்பி ஓடிய கொள்ளையர்கள் வைத்திருக்கலாம் என்றும், டிரைவரை மிரட்ட பயன்படுத்திய துப்பாக்கி பொம்மை துப்பாக்கி எனவும் போலீசார் தெரிவித்தனர்.
இதனை தொடர்ந்து ரகீம், கவுரி, அமீர் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மேலும் தப்பி ஓடியவர்களை பிடிக்க நாகர்கோவில் துணை போலீஸ் சூப்பிரண்டு நவீன்குமார் தலைமையில் 3 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.