விழுப்புரம்
மின்னல் தாக்கி இளநீர் வியாபாரி உள்பட 3 பேர் பலி
|திருக்கோவிலூர் மற்றும் திண்டிவனத்தில் மின்னல் தாக்கியதில் இளநீர் வியாபாரி உள்பட 3 பேர் பரிதாபமாக உயிரிழந்னர்.
திருக்கோவிலூர்,
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதி கிராமங்களில் நேற்று காலை முதல் மாலை 4.30 மணி வரை கடும் வெயில் சுட்டெரித்தது. இந்த நிலையில் மாலை 4.40 மணியளவில் வானத்தில் கருமேகங்கள் திரண்டு, திடீரென பலத்த காற்றுடன் சாரல் மழை பொழிந்தது. அடுத்த சில நிமிடங்களில் இடி-மின்னலுடன் கனமழை கொட்டியது. இந்த மழை 1½ மணி நேரம் நீடித்தது. மழையின் காரணமாக திருக்கோவிலூர் நகர் முழுவதும் மின்சாரம் தடைப்பட்டது. இதேபோல் உளுந்தூர்பேட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் நேற்று மாலை இடி-மின்னலுடன் கனமழை கொட்டியது. தொடர்ந்து 2 மணி நேரம் பெய்த மழையின்போது சில பகுதிகளில் ஆலங்கட்டி மழை பெய்தது.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் நேற்று இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இந்த மழை சுமார் ஒரு மணி நேரம் கொட்டி தீர்த்தது.
மின்னல் தாக்கி வியாபாரி பலி
இந்த மழையின் போது மின்னல் தாக்கியதில் 3 பேர் பலியாகி உள்ளனர். அதன் விவரம் வருமாறு:-
திருக்கோவிலூர் பெருமாள் நாயக்கர் தெருவை சேர்ந்தவர் ஏழுமலை மகன் அன்பு (வயது 38). இளநீர் வியாபாரியான இவர் நேற்று மாலை வியாபார ரீதியாக கரடி கிராமத்திற்கு சென்று விட்டு மோட்டார் சைக்கிளில் திருக்கோவிலூருக்கு புறப்பட்டார்.
அந்த சமயத்தில் அங்கு பலத்த மழை பெய்ததால், அன்பு சாலையோர புளியமரத்தின் அடியில் ஒதுங்கி நின்றார். அப்போது அவரை மின்னல் தாக்கியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
திண்டிவனம் அடுத்த வரகுப்பட்டு பகுதியை சேர்ந்த பெருமாள் மனைவி அஞ்சலி (36) என்பவர் அப்பகுதியில் உள்ள வயல்வெளிக்கு சென்றார். அப்போது இடி, மின்னலுடன் மழை பெய்தது. இதில் மின்னல் தாக்கியதில் அவர் பலத்த காயமடைந்தார்.
இதையடுத்து அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், அஞ்சலி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதேபோல் திண்டிவனம் அருகே பெரும்பாக்கத்தை சேர்ந்த துரைசாமி மனைவி ரஞ்சிதம் (60) என்பவரும் மின்னல் தாக்கி பலியானார்.
மரம் தீப்பிடித்து எரிந்தது
இதுதவிர மின்னல் தாக்கியதில் திண்ணனூர் பகுதியை சேர்ந்த ஏழுமலை (50) மற்றும் அவரது மனைவி நீலா (40) ஆகிய 2 பேரும் பலத்த காயமடைந்தனர்.
இதனிடையே மின்னல் தாக்கியதில் பூதேரி கிராமத்தில் நின்ற தென்னை மரம் ஒன்றும் தீப்பற்றி எரிந்தது. அதனை திண்டிவனம் தீயணைப்பு நிலைய அலுவலர் கதிர்வேல் தலைமையில் வீரர்கள் அணைத்தனர்.