சேலம்
சேலத்தில் தொழிலாளி கொலை வழக்கில் சிறுவன் உள்பட 3 பேர் சரண்-பரபரப்பு தகவல்கள்
|சேலத்தில் தொழிலாளி கொலையில் சிறுவன் உள்பட 3 பேர் சரண் அடைந்தனர். மேலும் இந்த கொலை தொடர்பாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது.
தொழிலாளி கொலை
சேலம் கிச்சிப்பாளையம் பஞ்சதாங்கி ஏரி பகுதியை சேர்ந்தவர் கண்ணன் (வயது 35). மூட்டை தூக்கும் தொழிலாளி. இவருக்கு திருமணமாகி 3 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் கடந்த 21-ந் தேதி கண்ணன் வீடு அருகே கல்லால் தாக்கி கொலை செய்யப்பட்டு கிடந்தார். இது குறித்து கிச்சிப்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சீனிவாசன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் கண்ணன் கொலை செய்யப்பட்டு கிடந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்தனர். அதில் சம்பவம் நடந்த அன்று அந்த வழியாக 2 பேர் அடிக்கடி சென்று வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து கண்காணிப்பு கேமராவில் பதிவான உருவங்களை வைத்து அவர்கள் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்கள்? என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டது.
3 பேர் சரண்
இதனிடையே கொலையாளிகளை விரைவில் பிடிக்க போலீஸ் துணை கமிஷனர் லாவண்யா மேற்பார்வையில் உதவி கமிஷனர் அசோகன், இன்ஸ்பெக்டர் சீனிவாசன் ஆகியோரது தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இந்த நிலையில் கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது களரம்பட்டி வீரவாஞ்சி தெருவை சேர்ந்த கார்த்திக் (23), காளிகவுண்டர் தெருவை சேர்ந்த தமிழரசன் (21) ஆகியோர் என்பது தெரியவந்தது.
இதுதவிர இந்த கொலையில் வேறு ஒரு சிறுவனுக்கு தொடர்பு இருப்பதாகவும் கூறப்பட்டது. இதையடுத்து போலீசார் அவர்களை பல்வேறு இடங்களில் தேடி வந்தனர். மேலும் அவர்கள் வக்கீல் மூலம் கோர்ட்டில் சரண் அடைய திட்டமிட்டதாக தகவல் பரவியது. இந்த நிலையில் இந்த கொலை தொடர்பாக நேற்று காலை கார்த்திக், தமிழரசன் மற்றும் 16 வயது சிறுவன் ஆகியோர் சேலம் டவுன் கிராம நிர்வாக அலுவலர் கோபிநாத் முன்னிலையில் சரண் அடைந்தனர்.
பரபரப்பு தகவல்கள்
இதையடுத்து அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். இதில் பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதுகுறித்து போலீஸ் உயர் அதிகாரிகள் கூறியதாவது:-
மூட்டை தூக்கும் தொழிலாளியான கண்ணனுக்கு திருமணமாகி 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். இந்த நிலையில் கடந்த 9 மாதங்களுக்கு முன்பு அவருடைய மனைவி உறவினர் ஒருவருடன் சென்றுவிட்டார். இதையடுத்து குழந்தைகள் பாட்டி வீட்டில் தான் வளர்ந்து வருகின்றனர். இந்த நிலையில் சம்பவத்தன்று கண்ணன் குடிபோதையில் நடந்து வந்துள்ளார். அப்போது அந்த வழியாக வந்த கார்த்திக், தமிழரசன் ஆகியோர் அவரை வழிமறித்து தீப்பெட்டி கேட்டனர்.
ஆனால் குடிபோதையில் இருந்த கண்ணன் அவர்களை திட்டி உள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த கார்த்திக், தமிழரசன் ஆகியோர் அவரை தாக்கியதுடன் அவரது பாக்கெட்டில் இருந்து தீப்பெட்டியையும் எடுத்து சென்றனர். பின்னர் கண்ணன் அங்கிருந்து சிறிது தூரம் சென்ற போது அந்த வழியாக வந்த 16 வயது சிறுவனிடம், நீ தானே என்னை அடித்தாய் கூறி அவனை திட்டி உள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அவனும் கண்ணனை தாக்கினார்.
சாவு
மேலும் திரும்ப அந்த வழியாக வந்த கார்த்திக், தமிழரசன் ஆகியோரும் சிறுவனுடன் சேர்ந்து கண்ணனை மீண்டும் தாக்கி உள்ளனர். இதில் படுகாயம் அடைந்த கண்ணன் சம்பவ இடத்திலேயே இறந்து விட்டார். இதையடுத்து அவர்கள் 3 பேரும் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
கைதான சிறுவனை அரசு கூர்நோக்கு இல்லத்திலும், கார்த்திக், தமிழரசன் ஆகியோரை சேலம் மத்திய சிறையில் அடைக்கவும் போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.